ரஜினி, கமல் எனக்கு ஜூனியர்கள்!

ஞாயிறு பெப்ரவரி 11, 2018

சினிமா துறையில் ரஜினி, கமல் எனக்கு சீனியர்கள் என்றும் அரசியலில் எனக்கு அவர்கள் ஜூனியர்கள்தான் என்றும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

அம்பத்தூரில் தே.மு.தி.க. கட்சி நிர்வாகியின் கடை திறப்பு விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தனர்.

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் வேண்டும். நீட் தேர்வு வந்தால்தான் நன்கொடை கொடுக்காமல் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியும். ஏழைகளால் ரூ.50 லட்சம் கொடுத்து மருத்துவம் படிக்க முடியுமா?

சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்கவே கூடாது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளி என்பதை பார்க்க வேண்டும். பா.ஜ.க. தலைவர்கள் தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்றும் என்று கூறி வருகிறார்கள். ஆனால் பா.ஜனதாவால் தமிழகத்தில் கையும் ஊன முடியாது. காலும் ஊன்ற முடியாது.

சினிமாவில்தான் ரஜினி, கமல் எனக்கு சீனியர்கள். அரசியலில் எனக்கு அவர்கள் ஜூனியர்கள்தான். அவர்களால் அரசியலில் ஜெயிக்க முடியாது. உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடும். தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.