ரபேல் ஒப்பந்தத்தில் எங்கள் தலையீடு இல்லை! - பிரான்ஸ் அரசு

Saturday September 22, 2018

ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் டஸ்ஸால்ட் நிறுவனம் அதன் பங்குதாரரரை தேர்வு செய்ததில் எங்களின் தலையீடு இல்லை என பிரான்ஸ் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது

ரபேல் பேர ஊழலில் பிரதமர் மோடியின் நண்பருக்கு நேரடியாக 1.30 லட்சம் கோடி ரூபாய் ஆதாயம் கிடைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

‘இந்தியா கொள்முதல் செய்யும் 36 ரபேல் போர் விமானங்களை வரும் 50 ஆண்டுகளுக்கு பராமரிப்பதற்காக மக்கள் பணத்தில் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் பிரதமரின் நண்பருக்கு சொந்தமான கூட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது’ எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே, இந்திய அரசின் ஆலோசனையின் படிதான் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. இந்திய அரசால் கைக்காட்டப்பட்ட ஒரு நிறுவனத்தை எனது ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இணைத்தோம். இதில் பிரான்ஸ் அரசு முடிவு செய்ய எதுவுமில்லை என்று அவர் தெரிவித்தார். 

ஹாலன்டேவின் இந்த கருத்து இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக செய்திகள் வெளியானதும் பிரதமர் மோடி இந்தியாவிற்கு துரோகம் இழைத்துவிட்டார் என ராகுல் காந்தி மோடியை கடுமையாக விமர்சித்தார். 

இந்நிலையில், தங்களின் பங்குதாரரரை தேர்வு செய்ய பிரான்சை சேர்ந்த நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. எனவே ரிலையன்ஸ் நிறுவனம், ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் டஸ்ஸால்ட் நிறுவனத்தின் பங்குதாராக தேர்வு செய்யப்பட்டதில் எங்களின் தலையீடு ஏதும் இல்லை என பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-

பிரான்ஸ் நிறுவனங்களின் பங்குதாரர்களாக இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டதில், தற்போது தேர்வு செய்ததில் வருங்காலங்களில் தேர்வு செய்யப்போவதில் அரசின் தலையீடு ஏதும் இல்லை.

எனவே, தங்களுக்கு பொருத்தமானவர்களை பங்குதாரர்களாக தேர்வு செய்துகொள்ள பிரான்ஸ் நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. அதன் பின்னர் இந்திய அரசின் ஒப்புதலுடன் இந்தியாவில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை இந்த பங்குதாரர்களின் உதவியுடன் பிரான்ஸ் நிறுவனங்கள் செயல்படுத்தும். 

இதன் அடிப்படையில், பொது மற்றும் தனியார் துறையை சேர்ந்த இந்திய நிறுவனங்களுடன் ஏற்கெனவே  பல்வேறு ஒப்பந்தகளில் பிரான்ஸ் நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.