ரவீந்திர கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்கு மைத்திரி முயற்சி!

Friday September 14, 2018

 முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரட்ண கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்கான சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சியை சிறிலங்கா  அமைச்சரவை நிராகரித்துள்ளது.

முப்படைகளின் பிரதானி ரவீந்திர குணவர்த்தன கைதுசெய்யப்படுவதை தடுப்பது குறித்து ஆராய்வதற்காக சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவையின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும்   அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதிக்கு இந்த விடயத்தில் ஆதரவு கிடைக்காததை தொடர்ந்து பிரதமர் நாடு திரும்பியவுடன் இந்த விவகாரம் குறித்து மீண்டும் ஆராய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் வியட்நாமிலிருந்து நாடு திரும்பும் வரை இந்த விடயம் குறித்து கருத்துக்கள் எதனையும் வெளியிடவேண்டாம் என அமைச்சர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஆள்கடத்தல்கள் படுகொலைகள் தொடர்பான விடயங்கள் குறித்து இடம்பெறும் விசாரணைகளி;ற்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டாம் என சிறிசேன  சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளிற்கு தெரிவித்துள்ளார் என ஊடகங்களி;ல் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மறுப்பு எதுவும் அரச தரப்பிலிருந்து வெளியாகவில்லை.

சிறிலங்கா  குற்றப்புலனாய்வு பிரிவினர் முப்படைகளின் பிரதானிக்கு எதிரான ஆதாரங்களை சேகரித்துள்ளமை குறித்தும் அவரை கைதுசெய்வதற்கான நீதிமன்ற  உத்தரவினை பெற்றுள்ளமை குறி;த்தும் ஜனாதிபதி சீற்றமடைந்துள்ளார்.

கொழும்பில் தமிழ் இனைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத் மறைந்திருப்பதற்கு உதவினார் என முப்படைகளின் பிரதானி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது