ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்வதற்கு குண்டு தயாரித்தவர் சிறிலங்காவில்!

Tuesday March 13, 2018

முன்னாள் இந்திப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்கு வெடிகுண்டு தயாரித்தவர் தற்போது சிறிலங்காவில் இருக்கிறார் என அப்படுகொலை விசாரணை முகவரமைப்பான சி.பி.ஐ. இந்திய உயர் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (12) இதனைத் தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை மீள ஆரம்பிக்க முடியாது எனவும் கொலையாளிகளில் ஒருவரின் வேண்டுகோளை நிராகரிக்க வேண்டும் எனவும் சி.பி.ஐ. நீதிமன்றத்திற்கு தெரிவித்தது என என்.டி.ரி.வி. செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது.

ஏ.ஜி. பேரறிவாளன் தனக்களிக்கப்பட்ட தீர்ப்பை இரத்துச் செய்யுமாறு நீதிமன்றத்திடம் மனுத்தாக்கல் செய்திருந்தார். அத்துடன் 26 வருடமாக சிறையிலிருந்துவரும் அவர் தனது வழக்கை மீள ஆரம்பிக்குமாறும் கேட்டிருந்தார். 

இந்நிலையில் சிறிலங்காவில் இருந்து எந்த உதவியும் இல்லை என தெரிவித்திருக்கும் சி.பி.ஐ. குண்டு வெடிப்புத் திட்டத்தை தீட்டியவரை விசாரணை செய்வதற்கு சிறிலங்காவின் உதவி கிடைக்கவில்லை என்று கூறியுள்ளது.

இதேவேளை, குண்டு தயாரித்தவர் சிறிலங்காவில் இருக்கிறார் எனவும் விசாரணையாளர்கள் அவரை விசாரணைக்கு உட்படுத்தியிருக்கவில்லை எனவும் பேரறிவாளன் நீதிமன்றத்தில் கூறியிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.