ராணுவ கண்காட்சியை பார்க்க லட்சக்கணக்கில் குவிந்த பொதுமக்கள்!

சனி ஏப்ரல் 14, 2018

மாமல்லபுரம் அருகே ராணுவ கண்காட்சியை பார்க்க லட்சக்கணக்கில் குவிந்த பொதுமக்களால் சுமார் 7 கி.மீ. தூரத்துக்கு வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் கண்காட்சியை நடக்கும் இடத்திற்கு 4 கி.மீ. தூரம் பொதுமக்கள் நடந்தே சென்றனர்.

மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி கடந்த 11-ந்தேதி தொடங்கியது. இந்த கண்காட்சியை பார்வையிட இன்று பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனவே கண்காட்சியை பார்வையிட ஏராளமானோர் ரூ.100 கொடுத்து ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தனர்.

இதற்கிடையே இன்று கண்காட்சியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. எனவே இன்று காலையில் இருந்தே பொதுமக்கள் குவியத் தொடங்கினார்கள்.

காலையிலேயே கண்காட்சியில் அதிக அளவில் மக்கள் திரண்டனர். இதனால் நெரிசல் ஏற்பட்டது. ரூ.100 கொடுத்து ஆன் லைனில் முன்பதிவு செய்தவர்களையும், இலவசமாக பார்க்க வந்த பொதுமக்களையும் போலீசார் ஒரே வழியிலேயே அனுமதித்தனர். இதற்கு முன்பதிவு செய்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களை தனி வழியில் அனுமதிக்க வேண்டும் என்றனர். அதற்கு காவல் துறையினர்  மறுத்து விட்டனர்.

ராணுவ கண்காட்சியை பார்வையிட ஒரே நேரத்தில் பொதுமக்கள் திரண்டதால் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. சுமார் 7 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கண்காட்சியை பார்க்க வாகனங்களில் வந்தவர்களும், வேலை வி‌ஷயமாக வெளியில் சென்றவர்களும் கிழக்கு கடற்கரை சாலையில் நெரிசலில் சிக்கித் திணறினார்கள்.

கண்காட்சியை பார்வையிட சென்றவர்களின் வாகனங்கள் திருப்போரூர், கானத்தூர், கேளம்பாக்கம், நெம்மேலி ஆகிய இடங்களில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து சுமார் 4 கி.மீ. தூரம் பொது மக்கள் நடந்தே சென்றனர். பள்ளிகளில் இருந்து அழைத்து செல்லப்பட்ட மாணவ- மாணவிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் அந்த பகுதியை சுற்றிலும் 5 கி.மீ. தொலைவுக்குள் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கி இருந்தனர். அவர்கள்தான் கண்காட்சியில் உள்ள ராணுவ கருவிகள் பற்றிய விவரங்களை பொதுமக்களுககு விளக்கி கூறுவார்கள்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக அவர்களால் கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு செல்ல முடியவில்லை. அவர்களை காவல் துறை  தங்கள் வாகனங்களில் அழைத்து சென்றனர்.

இன்று ஒருநாள் மட்டுமே கண்காட்சியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான பொதுமக்கள் அங்கு குவிந்தனர்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொள்ளை சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க கேமரா இணைக்கப்பட்ட 6 வாகனங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. 108 ஆம்புலன்சு வண்டிகள் 6-ம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.