ரெஜினோல்ட் கூரேயிற்கு சாட்டையடி கொடுக்கத் தயாராகும் புலம்பெயர் தமிழர்கள்!

Wednesday October 03, 2018

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கம் இன்றும் கொழுந்து விட்டெரிவது புலம்பெயர் தேசங்களில் தான். எப்படியாவது அதனை அணைத்து விட வேண்டும் என்று கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக எவ்வளவு தான் சிங்களம் குத்தி முறிந்தாலும், அதனை அணைய விடாது உயிர்ப்புடன் தக்க வைத்திருப்பதில் புலம்பெயர்வாழ் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் ஆற்றி வரும் பங்கு கனதியானது.

ஆனாலும் சிங்களமோ விடுவதாக இல்லை. ஆண்டுக்கொரு மூலோபாயம், மாதத்திற்கொரு யுக்தி, வாரத்திற்கொரு தந்திரம், நாளுக்கொரு துரோகச்செயல் என்று வெவ்வேறு யுக்திகளைக் கையாண்டு தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத் தீயைத் அணைத்து விடுவதற்கு சிங்களம் துடியாய்த் துடிக்கின்றது. இவ்வாறான சிங்களத்தின் முயற்சிகளின் புதிய வடிவமாகவே இப்பொழுது வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவர்கள் களமிறக்கி விடப்பட்டு இருக்கின்றார்.

ரெஜினோல்ட் கூரே தமிழர்கள் அறியாத ஒருவர் அல்ல. யாழ் போதனா மருத்துவமனையின் இரத்த வங்கிக்கு சிங்களப் படையினர் குருதிக் கொடை செய்வதால், தமிழ் மக்களின் உடலில் சிங்கள இரத்தம் கலந்துள்ளது என்ற புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்ட மாமேதை அவர்.

ஒருவருடைய உடலில் இன்னொருவருடைய குருதி கலப்பதால் அவரது மரபணுவில் எந்த விதமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பது எப்பொழுதோ விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட ஒன்று. அதாவது சிங்களப் படையினரின் குருதி தமிழர்களின் உடலில் ஏற்றப்படுவதால் ஒரு நாளும் தமிழர்கள் சிங்களவர்கள் ஆகப் போவதில்லை. எட்டாம் வகுப்பின் விஞ்ஞான பாடத்தில் கற்றிருக்க வேண்டிய இந்த மெய்யுண்மையை ஒரு மாகாணத்தின் ஆளுநர் ஆகிய பின்னரும் ரெஜினோல்ட் கூரே அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது அவரது அறியாமைக்கு மட்டுமன்றி அவரது முட்டாள்தனத்திற்கும் சான்று பகர்கின்றது என்றால் அது மிகையில்லை.

அப்படிப்பட்ட ஒரு அடிமுட்டாளை களமிறக்குவதன் மூலம் புலம்பெயர் தமிழர்களை மடக்கி விடலாம் என்று சிங்களம் கருதுவது, அதன் அடுத்த முயற்சியும் மண்கவ்வப் போகின்றது என்பதையே கட்டியம் கூறுகின்றது.

இதில் வேடிக்கை என்னவென்றால் ரெஜினோல்ட் கூரே என்ற மாமேதையின் பின்னால் புலம்பெயர் தமிழர்களை அணிதிரள வைக்கலாம் என்ற கற்பனையில் புலம்பெயர் தேசங்களில் சிலர் களமிறங்கியிருப்பது தான்.

இவர்களில் ஒருவரது பெயர் புலிக்குட்டி ரஞ்சன். சுவிற்சர்லாந்தில் வசிக்கும் இவர் புளொட் தேச விரோத கும்பலின் புலம்பெயர் பிரமுகர்களில் ஒருவர். தமிழீழ தாயகத்தில் தமிழின அழிப்பு யுத்தத்தை சிங்களம் கட்டவிழ்த்து விட்ட பொழுது மகிந்த ராஜபக்சவோடும், அவரது படைத்துறைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெலவோடும் புகைப்படம் எடுத்துத் தான் ஒரு பச்சைத் தமிழினத் துரோகி என்பதை அப்பொழுதே அடையாளப்படுத்தியவர் இவர்.

இம்மாத இறுதியில் வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு விடும், அதன் பின்னர் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அங்கு ரெஜினோல்ட் கூரேயின் ஆட்சி ஆட்சியே இடம்பெறும், எனவே அவரைக் கைக்குள் வைத்திருந்தால் வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யலாம் என்று கூறி சிங்களம் விரிக்கும் வலையில் சுவிற்சர்லாந்துவாழ் தமிழ் வணிகர்களையும், நலன்விரும்பிகளையும் வீழ்த்தி விடலாம் என்று இவர் கனவு காண்கிறார். இவரது நாசகார முயற்சிக்குத் தகுந்த பதிலடியை எதிர்வரும் நாட்களில் சுவிற்சர்லாந்து வாழ் தமிழர்கள் வழங்குவார்கள் என்பது வேறு விடயம். ஆனால் இவரைப் போன்று பிரித்தானியாவிலும், பிரான்சு தேசத்திலும் இன்னும் சில தேசவிரோதிகள் கனவு காண்பது வேடிக்கையானது.

வடதமிழீழமும், தென்தமிழீழமும் தமிழர்களின் தாயக பூமி. அவற்றை கடுகதியில் அபிவிருத்தி செய்து மற்றுமொரு சிங்கப்பூராக மாற்றும் வல்லமை புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு. வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் என்று துண்டாடப்பட்ட நிலையில் இன்றிருக்கும் தமிழீழ தாயகம், ஒரே மாநிலமாக ஆக்கப்பட்டு, அதனைத் தமிழர்களே ஆளும் மாநில அரச கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு நாளையே உலக சமூகம் வழிவகை செய்தால், அக்கணமே தமிழீழ தாயகத்தின் அபிவிருத்திக்கு அள்ளிக் கொடுப்பதற்கும், அங்கு முதலீடு செய்வதற்கும் புலம்பெயர்வாழ் தமிழர்களில் பலர் தயாராகவே இருக்கின்றார்கள்.

ஆனால் பட்டின சபைகளுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களை மட்டும் கொண்ட கட்டமைப்புக்களாக மாகாண சபைகள் இயங்கும் பொழுது, இருகூறாகத் துண்டாடப்பட்ட – சிங்களப் படையாட்சிக்கு உட்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட மாநிலமாகத் தமிழீழ தாயகம் திகழும் பொழுது, அம் மாநிலம் மீதான ஏகபோக அதிகாரங்களைக் கொண்டவர்களாக சிங்களவர்கள் மட்டும் விளங்கும் பொழுது இது நிகழவே போவதில்லை.

இதனை ரெஜினோல்ட் கூரே மட்டுமன்றி புலம்பெயர் தேசங்களில் அவருக்குப் பரிவட்டம் கட்டுவோரும் விரைவில் புரிந்து கொள்வார்கள்.

 – போராளி வாகீசன் (பிரித்தானியா)