ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்ப தயாராகும் வங்கதேசம்!

Saturday November 03, 2018

வங்கதேசத்தில் தஞ்சமடைந்திருக்கும் ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்பும் பணி அடுத்த சில வாரங்களில் தொடங்கியிருக்கின்றது. வங்கதேச தலைநகர் டாக்காவில் இரு நாட்டு அதிகாரிகளும் சந்தித்ததை தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 2017ல மியான்மரில் ஏற்பட்ட தொடர் வன்முறைகள் மற்றும் ராணுவத்தின் தேடுதல் வேட்டைக்  காரணமாக உயிருக்கு அஞ்சிய 8 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்திருந்தனர். இது வங்கதேசத்துக்கு பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கியிருந்த நிலையில், ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கே திருப்பி அனுப்பும் விதமாக இருநாடுகளுக்கிடையே கடந்த நவம்பர் 2017ல் ஒப்பந்தம் கையெழுத்தானது.  

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இதுவரை சொற்பமான ரோஹிங்கியா அகதிகளே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விதமாக வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட வங்கதேச வெளியுறவு செயலாளர் ஷாஹிதுல் ஹக்கூ, “இம்மாத (நவம்பர்) நடுப்பகுதியிலிருந்து ரோஹிங்கியாக்களை மியான்மர் திரும்ப பெற்றுக்கொள்ளும்” எனக் கூறியுள்ளார். 

“நாங்கள் பல்வேறு கட்டளைகளை நெறிப்படுத்தியுள்ளோம். சட்ட ஒழுங்கை பாதுகாக்க உள்ளூர் சமூகத்துடன் காவல்துறை இணைந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளோம்,” எனக் கூறியிருக்கிறார் மியான்மர் வெளியுறவு அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர் மிண்ட் து. அடுத்த மாதம் முதல் ரோஹிங்கியாக்களை திரும்ப எடுத்து கொள்வதற்கான பணிகள் தொடங்குவோம் எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், ரோஹிங்கியாக்களை வேறுபடுத்தி பார்ப்பதை தவிர்க்கும் வகையில் காவல்துறைக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். 

மியான்மர் ரக்ஹைன் பகுதியின் நிலை பற்றிய பெரும் அச்சுறுத்தல் நீங்காத நிலையில், ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்புவது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என மனித உரிமை அமைப்புகள் கவலைக் கொண்டுள்ளன.