ரோஹிங்கியோ மீதான ஐ.நா.வின் அக்கறை தமிழர்கள் மீது இல்லாமல் போனதேனோ?

Tuesday September 11, 2018

கடந்த ஆண்டு மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக புலம்பெயர்ந்த சுமார் ஏழரை இலட்சம் வரையான ரோஹிங்கியோ அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர். மியன்மாரில் ரோஹிங்கியோ முஸ்லிம்கள் மீது அந்நாட்டு அரசு படையினரும், கடும்போக்கு மதவாதிகளும் முன்னெடுத்து வரும் இனஅழிப்பு நடவடிக்கையில், தம் கண் முன்பே தங்கள் உறவுகளின் உயிர்களையும், உடமைகளையும் பறிகொடுத்துவிட்டு, வங்கதேசத்திற்குள் தப்பித்துச்சென்று நுழைந்தவர்கள் இவர்கள்.

இவர்கள் அகதிகளாக புலம்பெயர்ந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபையில் உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தாரஸ் (Antonio Guterres), ரோஹிங்
கியோ அகதிகள் தஞ்சமடைந்த சூழலை கடந்த ஆண்டின் மிக மோசமான மனித உரிமை நெருக்கடி என அறிவித்துள்ளார். ரோஹிங்கியோ மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை கடந்த மாதம் வங்கதேசத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு அம் மக்களின் கண்ணீர் கதையைக் கேட்ட பின்னர், கடந்த ஆண்டின் மிக மோசமான மனித உரிமை நெருக்கடியாக ஐ.நா. பொதுச் செயலர் இந்த அவலத்தை அடையாளம் காட்டியிருக்கின்றார்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நேரில் சென்று பார்வையிட்டு, அதில் பாதிக்கப்பட்டு பேரழிவுகளுடன் உயிர்தப்பி மீண்ட மக்களின் அவலக் கதைகளைக் காது கொடுத்துக் கேட்டதன் பின்னரும், தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது பாரிய அழிவு என்று சொல்லவதற்கு முன்வராத முன்னாள் ஐ.நா. பாதுகாப்புச் செயலர் பான் கீ மூன் போலன்றி, ரோஹிங்கியோ மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை கேட்ட பின்னர், கடந்த ஆண்டின் மிக மோசமான மனித உரிமை நெருக்கடியாக ஐ.நா. பொதுச் செயலர் அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதொரு விடயம்.

ஏற்கனவே, ஐ.நா. பாதுகாப்பு சபை உட்பட அமெரிக்காவும் ஏனைய மேற்குலக நாடுகளும் ரோஹிங்கியோ முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறுபவை இனச்சுத்திகரிப்பு என்று வெளிப்படையாகக் குற்றம்சாட்டி வரும் நிலையில், ஐ.நா. பொதுச் செயலரின் அறிவிப்பு அதற்கு மேலும் வலுச்சேர்க்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாகும்.

ஏற்கனவே, தனது வங்கதேசப் பயணத்தின் பின்னர் வெளியிட்ட அறிக்கையயான்றில் மியான்மர் அதிகாரிகளுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கோ சிறப்பு தீர்ப்பாயத்துக்கோ பரிந்துரைக்கப்பட வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலர் குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது மேலும் காத்திரமான கருத்தை அவர் வெளியிட்டிருக்கின்றார்.

மியான்மர் இராணுவத்தின் பயங்கரமான மனித உரிமை மீறல்களை எதைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாது என அழுத்தமாக ஐ.நா. பொதுச் செயலர் குறிப்பிட்டுள்ள நிலையில், ரோஹிங்கயோ இனத்தவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, அந்நாட்டு இராணுவ உயரதிகாரிகள் மீது இன அழிப்பு வழக்குத் தொடர வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையக் குழுவும் வலியுறுத்தியுள்ளது. அதாவது, இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு மியான்மர் இராணுவத்தின் உயரதிகாரிகள் பொறுப்பாளிகள் ஆக்கப்பட வேண்டும். அவர்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்திலோ, அல்லது சிறப்பு தீர்ப்பாயத்திலோ இன அழிப்பு வழக்கு தொடரப்பட்டு, கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று ரோஹிங்கயோ விவகாரம் குறித்து விசாரித்து வரும் ஐ.நா.வின் உண்மை கண்டறியும் குழுவும் வலியுறுத்தியுள்ளது. ஐ.நா.வின் இதே நிலைப்பாட்டிலேயே அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் மியன்மார் மீது காத்திரமான நடவடிக்கையை எடுப்பதற்கு வலியுறுத்தி வருகின்றன.

எனினும், ஐ.நா.வின் உண்மை கண்டறியும் குழுவை மியான்மருக்குள் நுழைய அனுமதிக்காத மியன்மார், மனித உரிமைப் பேரவையின் எந்த தீர்மானங்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று உறுதியாக கூறியுள்ளது.

ஆனாலும், ஐ.நா.வின் இந்த நகர்வும் அதற்கு ஆதரவாக பலம் வாய்ந்த மேற்குலக நாடுகள் துணை நிற்பதும் மியான்மாருக்கு எதிர்காலத்தில் கடும் அழுத்தங்களை ஏற்படுத்தும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ரோஹிங்கியோ மீது இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை மியான்மார் ஆட்சியாளர்கள் திட்டமிட்ட வகையில் கடந்த பல ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தாலும், அது கடுமையானதாக மாறியது கடந்த ஆண்டிலேயே. ஆனாலும், ஓராண்டிற்குள் அங்கு நடைபெறுவது ஓர் இனச் சுத்திரிகரிப்பு என்று கண்டறிந்து, அதனை வெளிப்படையாக அறிவிக்க முடிந்த ஐ.நாவினாலும், அமெரிக்கா மற்றும் மேற்குலக சக்திகளாலும் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் தமிழ் மக்கள் மீது சிங்களப் பேரினவாத அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் ஓர் இனச்சுத்திகரிப்பு என்பதை கண்டறிவதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் ஏன் இன்னும் மனநிலை வரவில்லை? ஐ.நா. விசாரணைக்குழு நடத்திய விசாரணைகளில் இதுவரை சுமார் 10,000 ரோஹிங்கியோக்கள்  மியன்மாரில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இறுதிப் போரில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.வே ஏற்றுக்கொண்ட பின்னரும் கூட தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையே மேற்கொள்ளப்பட்டது என்பதை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?

போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட சிறீலங்காவின் இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஐ.நா.சபைக்கான சிறீலங்காவின் நிரந்தர பிரதிநிதியாக வைத்துக்கொண்டிருந்த ஐ.நா., மியன்மார் இராணுவத் தளபதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எவ்வாறு வலியுறுத்த முடிகின்றது? 

மியன்மாருக்கும் சிறீலங்காவிற்கும் அதிக வேறுபாடில்லை. இரண்டு நாடுகளும் பெளத்த மதத்தினரை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள். இரண்டு நாடுகளிலும் அதிகாரங்களை கையில் வைத்திருப்பது பெளத்த மதத் தலைவர்களே. தங்கள் நாட்டை முழுமையாக பெளத்த மதவாத நாடாக மாற்றுவதற்கு இரு நாட்டின் மதவாத சக்திகளும் கடுமையாக முயன்றுவருவது உலகறிந்த உண்மை. இந்த ஒடுக்குமுறைக்குள் இருந்து தங்களைப் பாதுகாப்பதற்கு அங்கு வாழும் ஏனைய இனங்கள் போராடுவதும் வெளிப்படையானது. 

தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கும் இழந்த உரிமையை மீட்பதற்கும் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடியதுபோன்றே, ரோஹிங்கயோ மக்களைப் பாதுகாப்பதற்கும் இழந்த உரிமைகளை மீட்பதற்கும் ரோஹிங்கயோ விடுதலைப் படையினர் ஆயுதம் தாங்கிப் போராடி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு பதிலடியாகவே இராணுவ நடவடிக்கை மேற்கொண்டதாக சிறீலங்கா கூறியதுபோன்றே, ரோஹிங்கயோ விடுதலைப் படையினரின் தாக்குதலுக்கு பதிலடியாகவே இராணுவ நடவடிக்கை மேற்கொண்டதாக மியன்மார் கூறுகின்றது.

ஆனால், ரோஹிங்கயோ மக்களுக்காகப் போராடுபவர்களை விடுதலைப் போராளிகளாகப் பார்க்கும் ஐ.நா. உட்பட்ட மேற்குலக நாடுகள், தமிழ் மக்களுக்காகப் போராடும் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கின்றது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் ரோஹிங்கயோ விடுதலைப் படையினருக்கு எதிராக மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதாக மியான்மர் இராணுவம் தெரிவித்தாலும், அது ‘திட்டமிட்ட ரீதியிலான இன அழிப்பு’ நடவடிக்கை என்று ஐ.நா. கண்டனம் தெரிவிக்கின்றது. ஐ.நாவிற்கு ஏனிந்த முரண்பாடு?

காரணம் மிக இலகுவானது. மியான்மாரின் ஆட்சியில் இருப்பவர்கள் ஐ.நாவிற்கும் மேற்குலகிற்கும் வேண்டப்படாதவர்கள். சிறீலங்காவின் ஆட்சியில் இருப்பவர்கள் மேற்குலகிற்கு வேண்டப்பட்டவர்கள். நல்லிணக்கப் போர்வை போர்த்தப்பட்டவர்கள்.

ஒருவேளை, சிறீலங்காவின் ஆட்சியிலும் அமெரிக்காவிற்கும் மேற்குலகிற்கும் வேண்டப்படாதவர்கள் பதவியில் இருந்தால், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டதும் இனஅழிப்புத்தான் என்று ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு ஐ.நாவும் மேற்குலகும் வருமோ..?

ஆனால், அவ்வாறானதொரு நிலை வராமல் தடுப்பதற்குத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இருக்கின்றனரே..!

ஆசிரிய தலையங்கம்
நன்றி: ஈழமுரசு