ரோஹிங்க்யா அகதிகள் மறு சீரமைப்புக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு!

Wednesday June 06, 2018

வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள ரோகிங்யா முஸ்லிம்களின் மறு சீரமைப்புக்கு தேவையான சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அந்நாட்டு மந்திரி தெரிவித்துள்ளார். 

மியான்மரில் ரக்கினே மாகாணத்தில் ரோகிங்யா முஸ்லிம்கள் அதிகளவில் உள்ளனர். இவர்களுக்கு எதிராக மெஜாரிட்டியாக வாழும் புத்த மதத்தினர் தாக்குதலில் ஈடுபட்டதால் கலவரம் மூண்டது. அதை தொடர்ந்து அங்கு வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. ஏராளமான ரோகிங்யா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 

அதை தொடர்ந்து உயிர் தப்பிக்க ரோகிங்யா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்காள தேசத்துக்கு நடை பயணமாகவும், படகு மூலமாகவும் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் இங்கு 7 லட்சம் ரோகிங்யா மக்கள் அகதிகளாக வந்துள்ளனர். 

அவர்கள் வங்காளதேசத்தில் காஸ் பஜாரில் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ராணுவம் உதவி செய்து வருகிறது. இந்நிலையில், வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள ரோகிங்யா முஸ்லிம்களின் மறு சீரமைப்புக்கு தேவையான சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அந்நாட்டு மந்திரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, வங்காளதேச நிதித்துறை மந்திரி அபுல்மால் அப்துல் முஹித் கூறுகையில், வரும் 2018-19ம் நிதியாண்டு பட்ஜெட்டில் ரோகிங்யா அகதிகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்க முடிவுசெய்துள்ளோம். இந்த நிதியால் ரோகிங்யா அகதிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என தெரிவித்துள்ளார்.