லிபியாவில் விமானத்தை கடத்தியவர்கள் சரண்!

வெள்ளி டிசம்பர் 23, 2016

லிபியாவில் இருந்து புறப்பட்ட விமானத்தை கடத்தி மால்டாவிற்கு திருப்பிய மர்மநபர்கள், பயணிகளை விடுவித்ததுவிட்டு காவல்துறையில் சரண் அடைந்தனர்.

லிபியாவில் இன்று அப்ரிகியா ஏர்வேசுக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 ரக பயணிகள் விமானம் ஒன்று 118 பயணிகளுடன் செபாவில் இருந்து திரிபோலிக்கு புறப்பட்டுச் சென்றது. ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், அதில் பயணம் செய்த இரண்டு நபர்கள் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். 

பின்னர், விமானத்தை மால்டாவில் தரையிறக்கச் செய்தனர். இதையடுத்து மால்டா விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். ரன்வேயில் நிறுத்தப்பட்ட விமானத்தை வீரர்கள் சுற்றி வளைத்து தயார் நிலையில் இருந்தனர். அவசர கால மீட்புக்குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். 

இதனால் என்ன நடக்குமோ என்ற பதற்றத்தில் அதிகாரிகள் தவித்த நிலையில், பயணிகளை விடுவித்த கடத்தல் காரர்கள் விமானத்தில் இருந்து இறங்குவதற்கு அனுமதித்தனர். இதையடுத்து பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர். அதனையடுத்து கடத்தல்காரர்களும் விமானத்தில் இருந்து இறங்கி சரண் அடைந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், விமானத்தைக் கடத்தியவர்கள் மால்டாவில் அடைக்கலம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களில் ஒருவர் லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் ஆதரவு கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர் என்றும் கூறப்படுகிறது.