லூபுளோமினல் தமிழ்ச்சங்கத்தின் 15 வது ஆண்டுவிழா!

வெள்ளி பெப்ரவரி 01, 2019

பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான லூபுளோமினல் தமிழ்சங்கம் 20.01.2019 அன்று  தனது தமிழ்ச்சோலையின் 15 வது ஆண்டினை மிகவும் சிறப்பாக கொண்டாடியிருந்தது.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையும் மாணவர்கள் அறிந்துகொள்வதோடுஅதைக்கொண்டாட வேண்டும் என்பதற்கமைய காலை பொங்கலிடல் நிகழ்வை நடாத்தியிருந்தனர். சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாநகரத்தைச் சேர்ந்தவர்கள் என எல்லோரும் பொங்கல் இட்டு பொங்கலை பொங்கியிருந்தனர்.

கலைநிகழ்வுகளாக முதலில் மங்கல விளக்கேற்றலினை தொடர்ந்து ஆரம்பமாகியது. Mr.le Maire MEIGNEN அவர்களும், மற்றும் சங்கஉறுப்பினர்களும் பெற்றோர்களும், ஏற்றிவைத்து நிகழ்வுகளை தொடக்கிவைத்திருந்தனர். அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்ச்சோலைக் கீதத்துடன் வரவேற்பு நடனத்தையும் நடன மாணவர்கள் வழங்கியிருந்தனர்.

வாழ்த்துப் பாடல்கள் நாடகம்,கிராமிய நடனம், எழுச்சி நடனம், வாய்ப்பாட்டு அபிநய நடனம், வில்லுப்பாட்டு, இன்னிசை,  காவடிநடனம், தற்காப்பு (கராத்தே) நாட்டிய நாடகம் போன்ற மாணவர்களின் கலைவெளிப்பாடுகள் பல மேடையேற்றப்பட்டிருந்தன.

15 வருட ஆண்டு நிகழ்வில் கலந்துகொண்டுசிறப்பித்த லூபுளோமினல் மாநகர முதல்வர் தமிழர்கள் பற்றியும், அவர்களின் தாய்மண் பற்றுமொழிப்பற்றும் பற்றியும் தனது மாநகரத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு தன்னால் முடிந்தளவு உதவி வருவதையும் கூறியிருந்தார். தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. கணேசநாதன் அவர்களும் உரையை ஆற்றியிருந்தார். இந்த சங்கத்தினை ஆரம்பித்ததையும் அது இத்தனை உயர்வாக வளர்ந்து நிற்பதையும் இதற்கு ஆரம்பம் முதல் இன்றுவரை ஆதரவு கொடுத்துக்கொண்டு இருப்பவர்களை நன்றியோடு பார்ப்பதோடு எமது தாயகத்தின் தேவைகளுக்கும் வாழ்வாதாரத்திற்கு தாமும் உதவி வருவதையிட்டு பெருமையடைவதாகவும் தெரிவித்திருந்தார்.

திருகுறள் மற்றும் மிகுதிறன் போட்டிகளிலும் ஏனைய போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு தமிழர் ஒருங்கிணைப்பின் பரப்புரைப் பொறுப்பாளர் திரு. து.மேத்தா அவர்கள் பரிசில் பொருட்கள் வழங்கி மதிப்பளிப்பு செய்திருந்தார். அவர் தனது சிறப்புரையில் லூபுளோமினல் தமிழ்ச் சங்கத்தின் அர்ப்பணிப்புமிக்க செயற்பாட்டை பாராட்டியதுடன் பிரான்சு மண்ணில் அதிகமானமாணவர்களைக் கொண்டுள்ள தமிழ்ச்சோலை என்பதுடன் அதனைவிட பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து எமது தாயக தேசம் எதிர்பார்க்கின்ற வகையில் நேர்த்தியான தமிழர்களாக வாழ்ந்து தமிழினம் விடுதலை பெற்று வாழவேண்டும் என்ற உணர்வுடன் பணியாற்றும் சங்க உறுப்பினர்களையும், பெற்றோர்களையும் வாழ்த்தியிருந்தார்.

இச்சங்கமான தனது நகரமக்கள், தமது  தமிழ்ச்சோலை என்று நின்றுவிடாது தாயகத்தில் வாழ்வாதாரத்தை எதிர்பார்க்கும் எம் தேசமக்களுக்கு தேவையான தம்மால் முடிந்தவரை உதவியையும் செய்துள்ளனர், இன்றும் செய்து வருகின்றார்கள் என்பதையும், சங்கத்தில் நிகழ்வுகளில் கிடைக்கும் பொருளாதார உதவிகளையும் சிறுகசிறுக சேர்த்து இப்பிரதேசமக்களின் அன்பான மனிதநேயத்துடனும் தாயகமக்களின்; துன்பதுயரத்தை துடைக்க இவர்கள் உதவிவருவதை மனநெகிழ்வோடு பாராட்டியதுடன் சமகாலஅரசியல் நிலைப்பாடுபற்றியும் மார்ச் 4ம் திகதிநடைபெறவுள்ள nஐனீவா 40 வது கூட்டத்தொடர்பற்றியும் அதில் எமது மக்கள் அதிகளவில் கலந்துகொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அத்துடன் தமிழ்ச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டகாலம் முதல் இருந்த எம்மவர்கள் இந்தமாநகரத்தின் முதல்வருடன் தொடர்ந்து நல்லஉறவை பேணிவந்ததையும், இன்று தமிழ் மக்கள் மீதும் அவர்களுக்கிருக்கும் உணர்வையும் புரிந்துகொண்டு எமக்கு பெரும் பக்கபலமாக இருந்து வருகின்றார்கள் என்பதையும்,எதிர்வரும் 2020 ல் நடைபெறவுள்ள மாநகரத்தேர்தல் பற்றியும் அதில் எமது மக்களின் வாக்குரிமை காத்திரம் மிக்கதாக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து வளர்தமிழ் 11,12 மாணவர்களும், தமிழ்ச்சோலையின் ஆசிரியர்களும் மதிப்பளிக்கப்பட்டனர். இவ் மதிப்பளித்தலினை தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தின் செயற்பாட்டாளரும், தோர்வுகளுக்கு பொறுப்பாளரும் ஆசிரியராகவும் மொழிகாவும் அதன் வளர்ச்சிக்காகவும் அயராது அர்ப்பணிப்புடன் உழைத்துவரும் திரு. ச. அகிலன் அவர்கள் மதிப்பளித்தலைச் செய்திருந்ததுடன் உரையையும் ஆற்றியிருந்தார். லூபுலோமினல் தமிழ்ச்சோலையானது அதிக தமிழ் மாணவர்களைகொண்டதாக இருப்பதுபோல் ஒவ்வொரு போட்டி நிகழ்வுகளிலும் பங்குபற்றி சிறப்பான வெற்றிகளைபெற்று வருகின்றனர் என்றும் சங்கத்தின் உன்னத செயற்பாடுகள் பற்றியும் நிர்வாகியையும் பாராட்டியிருந்தார்.

சங்கத்தின் தலைவர்திரு. செ. கணேசநாதன் அவர்கள், உபதலைவர்திரு. வே.சீராளன் ,செயலாளர் திரு.பி. அமலதாஸ் நிர்வாகி. திருமதி.nஐ.சாந்தி போன்றோர் மேடையில் மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்களின் விருப்பத்துடன் கரகோசத்திற்கு மத்தியில் மதிப்பளிக்கப்பட்டனர்.

நிகழ்வின் முத்தாய்ப்பாய் 30 வரையிலான மாணவர்கள் பங்கேற்ற “வலிசுமந்த போரின் வரிகள்’’ என்ற நாட்டிய நாடகம் மிகுந்த சிறப்பை தந்திருந்தது. தாயகத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் திட்டமிட்ட தமிழின அழிப்பிலிருந்துஉயிர்தப்பி அன்னியநாட்டில் அடைக்கம் தேடிக்கொண்டாலும் எமது இனத்திற்கு காலாகாலம் சிங்கள் ஆட்சியாளர் செய்த தமிழனப்படுகொலைகள் என்றுமே; மறைக்கவோ, மறுக்கவோ முடியாது என்பதை உணர்த்தும் வகையில் 1948ம் ஆண்டிலிருந் டி.எல் சேனநாயக்கா முதல் இன்று மைத்திரி அரசுவரை தமிழர்களுக்கு செய்த இனப்படுகொலை,புறக்கணிப்புகள், அதியுச்ச தமிழின அழிப்பாக முள்ளிவாய்க்கால் துயரத்தை அரைமணிநேரத்தில் கண்முன் காட்சிப்படுத்தியிருந்தனர்.

குழந்தைகளும், பெரியவர்களும் கண்கள் குழமாகிய நிலையில் மேடையையே வெறித்துபார்த்துக்கொண்டிருந்தனர். இந்த நாட்டிய நாடகத்தில் முன்னிலைபாத்திரம் செய்தபிள்ளைகள் 2009ல் முள்ளிவாய்க்கால் துயரத்தை நேரடியாககண்டுஅநுபவித்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

காலைமுதல் இரவு 9.00 மணிவரை பெற்றோர்களும், மாணவர்களும் சோர்ந்து போகாது மண்டபம் நிறைந்து காணப்பட்டனர். சிற்றுண்டிகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. பங்கு பற்றிய மாணவர்களின் நிகழ்வின் நிழற்படங்கள் உடனுக்குடன் சட்டமிட்டுகுறைந்த விலையில் வழங்க சங்கத்தினர் ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

இந்த தமிழ்ச்சோலையில் கல்வி கற்ற பழைய மாணவ மாணவிகள் அறிவிப்புக்கள், பொதுமக்களையும், விருந்தினர்களை கவனித்தல் ஏனைய செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தமை ஒரு நம்பிக்கையை எமக்கு தந்திருந்தது. காரணம் இன்று சங்கம் வளர்த்து தமிழை காத்துக்கொண்டு பாடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் மூத்தவர்களே இனிவரும் காலங்களில் இளையவர்கள் இவற்றைக் கையில் எடுத்துகொண்டு செல்லவேண்டும் செல்வார்கள் என்ற நம்பிக்கையை மனதில் தந்திருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுடன் தமிழ்ச் சங்க தமிழ்ச்சோலை15 வதுஆண்டு இனிதே நிறைபெற்றது.