லெபனானுக்கு எதிராக சவூதி போர் அறிவிப்பு!

Saturday November 11, 2017

லெபனான் பிரதமராக இருந்த சாத் ஹரிரி செளதி தலைநகரான ரியாத்தில் தனது பதவி விலகலை அறிவித்து சில நாட்கள் கடந்த நிலையில், செளதி அரேபியா லெபனான் நாட்டுக்கு எதிராகப் போரை அறிவித்துள்ளதாக லெபனானின் பலம் வாய்ந்த ஹெஸ்புல்லா ஷியா அமைப்பு தலைவர் ஹசன் நஸ்ரல்லா குற்றஞ்சாட்டியுள்ளார். 

சாத் ஹரிரியின் விருப்பத்திற்கு மாறாக செளதி அவரை வைத்துள்ளதாக ஹசன் நஸ்ரல்லா கூறியுள்ளார். லெபனானுக்கு எதிராக இஸ்ரேலை செளதி தூண்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பலம் வாய்ந்த ஹெஸ்புல்லா அமைப்பு இரானுடன் கூட்டாளியாக உள்ளது. 

ரியாத்தில் இருந்து ஒளிபரப்பான தொலைக்காட்சி ஒன்றில் தோன்றிய லெபனான் பிரதமராக இருந்த சாத் ஹரிரி, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறினார். 

இந்நிலையில்,சாத் ஹரிரி நாடு திரும்ப வேண்டும் என லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சாத் ஹரிரி செளதியில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், செளதி விடுக்கும் உத்தரவைச் செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. 

லெபனான் அதிபர் மைக்கேல் அவுன், சாத் ஹரிரியின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை. ´´லெபனானுக்கு எதிராகவும், ஹெஸ்புல்லா அமைப்புக்கு எதிராகவும் செளதியும், செளதி அதிகாரிகளும் போரை அறிவித்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது´´ என ஹசன் நஸ்ரல்லா கூறியுள்ளார். 

லெபனானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட, இஸ்ரேலுக்கு பில்லியன் கணக்கிலான பணத்தை கொடுக்க செளதி தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.