வடக்கில் அடை மழை, நயினாதீவில் அதிகூடிய மழைவீழ்ச்சி

Thursday November 02, 2017

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழ் நிலையான காலநிலை மாற்றம் இலங்கைக்கு நேர்மேலே காணப்படுவதால் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழை அல்லது மழைமுகிலுடன் கூடிய காலநிலை தொடரும் என திருநெல்வேலி வளிமண்டலவியல் ஆராய்ச்சி நிலையப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.

சிறிலங்காவின் பல இடங்களிலும் தொடர் மழை பெய்துவருகின்றது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் கடந்த மூன்று தினங்களாக தொடர்மழை பெய்து வருகின்றது. 

வடக்கில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் ஏனைய இடங்களில் 100 மில்லிலீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகும் வாய்ப்பு உள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் சிறிலங்காவிலேயே அதிகூடிய மழைவீழ்ச்சி நயினாதீவில் பதிவாகியுள்ளது. அங்கு 109.1 மில்லிலீற்றர் மழை பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் 45.1 மில்லிலீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

இரண்டாவது இடைநிலைப் பருவ பெயர்ச்சி காலநிலையாலேயே தற்போது மழைவீழ்ச்சி ஏற்படுகின்றது.

மழையுடன் இடி, மின்னல் தாக்கம் மற்றும் பலத்த காற்று போன்றவற்றில் இருந்து மக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறும் பிரதீபன் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதேவேளை, இந்த மழையால் தாழ் நிலங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. அப்பிரதேசங்களில் நிரந்தர வீடுகள் இன்றி வாழும் மக்கள் நிர்க்கதி நிலையை எதிர்நோக்கியுள்ளனர். 

வயல் நிலங்களில் வெள்ளம் தேங்கியுள்ளதால் விவசாயச் செய்கை மோசமாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.