வடக்கு ஆளுநர் அலுவலகம் மக்களால் முற்றுகை, ஏ-9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

ஒக்டோபர் 13, 2017

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கைதிகளின் உறவினர்களும் பொதுமக்களும் திரண்டு வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.  

யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக மக்கள் குழுமியவுடன் அங்கு பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டனர். ஆளுநர் அலுவலகம் அவர்களின் இறுக்கமான பிடிக்குள் வந்தது. 

ஆளுநர் அலுவலகத்தின் உள்ளே பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைத்து நிற்க மக்கள் வெளியே, ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நின்றனர். இதனால் உள்ளே எவரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

மக்கள் ஆளுநர் அலுவலகத்திற்கு வெளியே நின்று பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சற்று நேரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள ஏ-9 நெடுஞ்சாலையை குறுக்கே மறித்து அதில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்போது பொலிஸார் அவர்களைக் கலைக்க முற்பட்டனர். எனினும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அங்கு நின்று போராட்டக்காரர்களை ஒழுங்குபடுத்தினர். 

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பல நூற்றுக்கணக்கானோர் இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

இணைப்பு: 
செய்திகள்
திங்கள் ஒக்டோபர் 23, 2017

அம்பலன்தோட்டை - வாதுருப்பு பகுதியிலுள்ள வயல் காணியில் இருந்து குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

திங்கள் ஒக்டோபர் 23, 2017

கைதிகள் விடயத்தில் சிறிலங்கா அரசின் அசமந்தச் செயற்பாட்டுக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு...

திங்கள் ஒக்டோபர் 23, 2017

சிங்கள அரசின் காணி பறிப்பு நிகழ்வுகளில் அவர்கள் கலந்துகொள்வது ஏன்? சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வி