வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்ற ஐ.தே.க இடமளிக்க மாட்டுதாம்!

Monday July 23, 2018

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள எந்தவோர் இராணுவ முகாமையும் அகற்றுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்காதென, அந்தக் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திஸாநாயக்க உறுதிபட தெரிவித்தார். 

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தலைதூக்க, நவீன் திசாநாயக்கவோ அல்லது சஜித் பிரேமதாசவோ, ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்த அமைச்சர், ஆனால் இன்று, வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற, ஐ.தே.க முனைவதாகப் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும், அவ்வாறான பொய்யான தகவல்களை, தனது அரசியல் வாழ்வில் இதுவரை கேட்டதில்லை எனவும், குறிப்பிட்டார்.  

ஹட்டன் - கினிகத்தேனை நகரில், நேற்று (22) முற்பகல் காலை 11 மணியளவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்துரையாற்றிய திசாநாயக்க, தனது கட்சி ஒரு போதும் ஆனையிறவை விட்டுக் கொடுக்கவில்லை என்றும், குறிப்பாக சந்திரிகா அம்மையாரின் ஆட்சியிலேயே, ஆனையிறவு விட்டுக் கொடுக்கப்பட்டதாகவும் கூறியதோடு, அவ்வாறு எந்தவொரு பகுதியையும் இதுவரை கொடுத்ததும் இல்லை கொடுக்கப் போவதுமில்லை எனக் கூறினார்.  

இராணுவ வீரர்களைப் பலப்படுத்தி, அவர்களுக்காக முன்னின்ற கட்சியான ஐ.தே.க, இராணுவத்தினரைக் காப்பாற்றுவதற்கு, எப்போதும் கடமைப்பட்டுள்ளதாக, மேலும் கூறினார்.