வடக்கு கிழக்கில் பாரிய முதலீடு: ஈழத் தமிழர் சாதனை

வியாழன் ஏப்ரல் 21, 2016

ஸ்கன்டினேவியன் பொருளாதார முதலீட்டுக் குழுமத்தின் ஊடாக ஈழத் தமிழர் சாதனை

நமக்கு நாமே உதவும் திட்டம் பற்றி TNA எம்.பிக்களுடன் பேச்சுவார்த்தை சமூக, பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள டென்மார்க்கைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் ஸ்கன்டினேவியன் (Scandinavian) பொருளாதார முதலீட்டுக் குழுமம் திட்டமிட்டுள்ளதாக அதன் சர்வதேச மற்றும் இலங்கைத் திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் தருமன் தர்மகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள இவர் கடந்த வாரம் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரது உத்தியோகபூர்வ பணிமனையில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் தலைமையில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இதுதொடர்பாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

யுத்தத்தினால் தொலைந்துபோன வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களது வாழ்க்கையை மீட்டெடுப்பது மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் (NGO) இனியும் தமிழ் மக்கள் கையேந்தி நிற்கும் நிலையை இல்லாதொழிப்பது எனும் கருத்தொனியில் நமக்கு நாமே கை கொடுப்போம் எனும் அடிப்படையில் இந்த சமூக பொருளாதார அபிவிருத்தி முதலீட்டுத் திட்டம் அமையவுள்ளதாக தருமன் தர்மகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சிக்கு இலங்கை முதலீட்டுச் சபை தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், அதனூடாகத் தமது குழுமம் இலங்கையில் பல பாரிய முதலீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாரிய தொழிற்பேட்டைகள், துறைமுக இறங்கு துறைகள், நகர அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதிகள், விமான நிலைய விஸ்தரிப்புகளில் பங்கேற்பு உட்பட பலவற்றில் முதலீடுகளை மேற்கொண்டு உள்ளூரில் இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த முயற்சியின் முதற்கட்டமாக வடக்கு கிழக்கு மாகாண தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதிகளுடன் வெற்றிகரமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் மற்றும் ஜனாதிபதியையும் சந்தித்துப் பேச்சு நடத்த தமது குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான அலன் தருமன் ALLAN THARUMAN தனது குழுவினருடன் விரைவில் இலங்கை வரவுள்ளதாகவும் தருமன் தர்மகுலசிங்கம் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கினைத் தொடர்ந்து இந்தக் குழுமத்தின் பணிகள் மலையகத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டு அங்குள்ள மக்களது தேவைகள் குறித்து அங்குள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிற் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆராய்ந்து அங்கும் முதலீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படுமெனவும் இவர் தெரிவித்தார்.