வடக்கு மாகாக மக்களுக்கு ஜனநாயகம் இல்லை, கூறுகிறது ஜே.வி.பி

வெள்ளி அக்டோபர் 09, 2015

வடக்கு மாகாண மக்கள் முதலாளித்துவ மற்றும் இனவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ள ஜே.வி.பி, இந்த மக்களுக்கு முழுமையான ஜனநாயகம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

 

சிறிலங்காவில் குடும்ப ஆட்சிக்கு எதிராக போராடிய மக்கள் அதில் வெற்றி பெற்றார்கள். ஆனால், மீண்டும் குடும்ப ஆட்சி தலைதூக்கதியுள்ளது என்றும் ஜே.வி.பி தெரிவித்துள்ளது. 

 

புரட்சியாளர் சேகுவேராவின் நினைவு தின நிகழ்வு யாழ். ரிம்பர் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

 

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அடிப்படை உரிமைகளின்றி வாழ்கின்றார்கள். முதலாளித்துவத்தினை தோற்கடிப்பதற்கு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்பது சேகுவேராவின் கருத்தாக இருக்கின்றது. 

 

எனவே, சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பிரிவினையினை தவிர்த்து, எதிரிகளை அடையாளம் கண்டு விடுதலை போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். பௌதீக வளங்களை இலட்சியமாக கொண்டு இருக்கவில்லை. மாற்றங்கள் எமக்கு கட்டாயம் தேவை. அந்த மாற்றங்களுக்கு வழிகாட்டக் கூடியவராக சே இருக்கின்றார். 

 

எமது நாட்டில் உள்ள மக்கள் குடும்ப ஆட்சியை தோற்கடிக்க போராடினார்கள். அதில் வெற்றி பெற்றார்கள். ஆனால், எந்தவொரு மாற்றமும் ஏற்படாத நிலை தற்போது இருக்கின்றது. விவசாயம் பொருளாதார ரீதியில் நெருக்கடியாக இருக்கின்றது. 

 

எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக விவசாயிகளின் பிரச்சினைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார்.