வடக்கு மாகாண சபையினரை இழிவாகப் பேசிய சிறிலங்கா அமைச்சர் ராஜித

Wednesday May 16, 2018

வடக்கு மாகாண சபை தமது பதவிகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கே இன விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது என சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்தின தெரிவித்தார். 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு மாகாண சபையினர் நடத்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளமை தொடர்பாகக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். 

மேலும், வட மாகாண சபையினர் நடைபாதை அரசியல்வாதிகள் போல மாறிவிட்டார்கள் எனவும் ராஜித சேனாரத்தின தமிழ் அரசியல்வாதிகளை இகழ்ந்துரைத்தனர். 

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. 

இந்தச் சந்திப்பில், வடக்கில் இன அழிப்பு தினமாக மே 18 ஆம் திகதியை அனுஷ்டிக்க வடமாகாண சபையில் உள்ளவர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளின் போது பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாண சபை அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்காது மிகவும் செயற்திறனற்றுப் போயுள்ளது. இப்போது தெற்கில் உள்ள  நடைபாதை அரசியல்வாதிகள் போன்று இன விவகாரத்தை கையிலெடுத்து அடுத்த தேர்தலில் தமது பதவிகளை பாதுகாத்துக்கொள்வதற்காக அவர்கள் இதனைச் செய்கின்றார்கள்.

எந்தவொரு அரசியல்வாதியும் வங்குரோத்து நிலைமைக்கு வரும் போது அதிலிருந்து விடுபட பிரதான ஆயுதமாக இனம் மற்றும் மதங்களை கையில் எடுக்கின்றனர் என தெரிவித்தார்.