வட, கிழக்கில் ஒருவேளை உணவின்றி பல்லாயிரம் குடும்பங்கள், சிறிலங்கா அரசின் போலி முகம் அம்பலம்

Thursday November 02, 2017

வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தில் எப்பிரதேசத்திலும் இடம்பெறும் கொண்டாட்டங்களில்  மேலதிகமாக உள்ள உணவுகளை வீணாக்காமல் தங்களிடம் தந்துதவுமாறு விண்மீன்கள் என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

அவ்வாறான உணவுகளைப் பெற்று, வடக்கு - கிழக்கில் உணவில்லாமல் வாழும் மக்களின் பசியைப் போக்கும் பணியில் தாங்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் அதற்காக தமது பணியில் இணைந்துகொள்ளுமாறு அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. 

தமிழர் தாயகத்தில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் எனவும் அவர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது எனவும் சிறிலங்கா அரசாங்கம் சர்வதேசம் பூராகவும் பிரச்சாரம் செய்துவருகின்றது. 

ஆனால், இங்கு ஒருதொகை மக்கள் இன்னும் உணவுக்கே வழியற்றவர்களாக உள்ளனர் என்பதை இவ் உணவுக் கோரிக்கை எடுத்துக்காட்டுகின்றது. 

திருமண நிகழ்வுகள் உட்பட கேளிக்கை மற்றும் குடும்ப நிகழ்வுகளில் மேலதிகமாக உள்ள உணவுகளில் பழுதடையாத நிலையில் உள்ள உணவுகளை மாத்திரம் தந்துதவுமாறு அவ்வமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதேவேளை, எஞ்சிய அல்லது மேலதிக உணவுகளை மட்டுமே தாங்கள் பெற்றுக்கொள்வர் எனவும் பணமாகத் தாம் பெற்றுக்கொள்வதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

எனவே, மேலதிக உணவு வரும் பட்சத்தில், 077-0763610, 077-8480603, 077-0702280 என்ற அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.   

விண்மீன்கள் என்ற அமைப்பின் இச்சேவையைப் பலரும் பாராட்டியுள்ளனர். சிறிலங்கா அரசின் போலி முகத்தை அவர்கள் தோலுரித்துக் காட்டுகின்றனர் எனவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.