வட மாகாண சபைக்கு ஓர் அமைச்சரவை!

Monday July 16, 2018

வட மாகாண சபைக்கு ஓர் அமைச்சரவையை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை ஆளுநருக்கு வழங்குமாறு கோரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வட மாகாண சபையின் 127 விசேட அமர்வு இன்று (16) கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது, வட மாகாண முதலமைச்சர் உட்பட ஏனைய நான்கு அமைச்சர்கள் சபைக்கு வருகை தரவில்லை. சபையில் தமிழரசுக் கட்சி சார்ந்த உறுப்பினர்களும், எதிர்க்கட்சி தலைவர் உட்பட ஏனைய எதிரணி உறுப்பினர்களும் சபை அமர்வில் கலந்து கொண்டிருந்தனர். 

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கட்டளையின் பிரகாரம் வட மாகாண சபையில் யார் அமைச்சர்கள் என கோரி சபையில் விவாதங்கள் இடம்பெற்றன. விவாதங்களின் போது உறுப்பினர்கள் பலர் முதலமைச்சருக்கு எதிராக காரசாரமான வார்த்தைகளை தெரிவித்ததுடன், சிலர் முதலமைச்சருக்கு சார்பான கருத்துக்களையும் முன்வைத்தனர். 

இவ்வாறு பல விவாதங்களின் இறுதியில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இடைக்காலக் கட்டளை மூலம் எழுந்துள்ள நிலைமையை கருத்திற் கொண்டும், கட்டளை வழங்கப்பட்ட தினமான 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதியில் இருந்து முறைப்படியான அமைச்சர் சபை ஒன்று வடக்கு மாகாண சபைக்கு முழுமையாக பொறுப்புக் கூறக் கூடிய வகையில் இல்லாத நிலை ஒன்று தோன்றியுள்ளது. 

இதனால் உடனடியான அரசியல் அமைப்பு மீறல் ஒன்று ஏற்பட்டு விடக்கூடும் என்ற நியாயமான அச்சம் எழுந்துள்ளமையைக் கருத்திற் கொண்டும், மக்களிற்குச் சேவை வழங்கக் கூடிய நிறைவேற்று தீர்மானங்களை எடுக்க முடியாதவாறு வட மாகாண நிர்வாகம் முழுமையாக முடங்கக் கூடிய ஒரு ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது. 

மேலும், மாகாண சபையினது பிரதான கடமையான சட்ட வாக்கத் தத்துவத்தை பிரயோகித்து நியதிச் சட்டங்களை ஆக்க முடியாத தேக்க நிலை ஒன்று உருவாகியுள்ளதாலும் அதன் விளைவாக மாகாண செயற்பாடுகளிற்கு மத்தியின் சட்ட வாக்கங்களே பிரயோகமாகி அதிகாரப் பகிர்வுக் கோட்பாடே அர்த்தமற்றதாகி போய் விடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாலும் வடக்கு மாகாண முதலமைச்சர், அரசியலமைப்பின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அவரது தத்துவத்தை முறையாகப் பயன்படுத்தி வடக்கு மாகாண சபைக்கு ஓர் முழுமையான அமைச்சர்கள் சபையை உருவாக்குவதற்கான ஆலோசனையை எதுவித தாமதமும் இன்றி வடக்கு மாகாண ஆளுநருக்கு வழங்க வேண்டும் என்று இச்சபை தீர்மானிக்கின்றதாக அவைத் தலைவர் அவையில் அறிவித்தார்.