வதைமுகாம்களில் ஆண்கள் மீதும் சிங்களப் படையினர் வன்புணர்ச்சி - கள மருத்துவர் உயற்சி 

ஞாயிறு மே 08, 2016

மக்களை மையப்படுத்தித் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த பணிகள் தொடர்பாகவும், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றியும் கடந்த பாகத்தில் எம்மோடு பகிர்ந்து கொண்ட கள மருத்துவர் உயற்சி அவர்கள், இந்த இரண்டாவது பாகத்திலும் தலைவர் அவர்கள் தொடர்பான மேலும் பல தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.  அத்தோடு சிங்களப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட பின்னர் வதைமுகாம்களில் தானும், சக போராளிகளும் எதிர்கொண்ட வதைகளையும் விபரிக்கின்றார் கள மருத்துவர் உயற்சி. ஈழமுரசு பத்திரிகையின் சார்பில் அவரைச் செவ்வி கண்டவர் கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜா.

கேள்வி: தலைவர் அவர்களை சந்திப்பதற்கு உங்களுக்கு வாய்ப்புக்கள் ஏதும் கிட்டியதா?

பதில்: ஐந்து தடவைகள் சந்தித்திருக்கிறேன்.

கேள்வி: அவரை சந்தித்த பொழுது எவ்வாறான விடயங்களை நீங்கள் உரையாடிக் கொண்டீர்கள்?

பதில்: ஒரு தடவை சந்தித்த பொழுது ஓரிடத்தில் இருந்து சாப்பிட்டோம். அண்ணையுடன் இருந்து சாப்பிட்டோம். அண்ணை எல்லோரையும் இருக்க விட்டு - நாங்கள் அண்ணை சாப்பாட்டில் கைவைத்த பின்னர் சாப்பிடுவோம் என்று இருக்க - அண்ணை வந்திருந்து சொன்னார் ‘சாப்பிடுங்கடா’ என்று. ‘அண்ணை நீங்கள் சாப்பிடுங்கோ’ என்றோம். ‘நீங்கள் முதலில் சாப்பிடுங்கடா’ என்று நாங்கள் சாப்பிடுவதை - ஒவ்வொரு போராளியும் சாப்பிடுவதை அண்ணை - நான் அண்ணையைப் பார்த்தேன் - ஒவ்வொரு போராளியும் எப்படிச் சாப்பிடுகின்றார்கள், மனசாக, சந்தோசமாகச் சாப்பிடுகின்றார்களா என்று சொல்லி சாப்பிட்டுக் கொண்டு - அண்ணை சொல்வார், ‘சாப்பிடேக்கை புலனை அங்கை இங்கை திருப்பாமல் அமைதியாக சாப்பாட்டை இரசித்துச் சாப்பிடுங்கோ’ என்று.

இரண்டாவது, ஒவ்வொரு போராளியையும் அண்ணை சந்திக்கும் பொழுது தனிப்பட்ட பிரச்சினையில் இருந்து கேட்பார். ‘குடும்பப் பிரச்சினை, நீ எங்கே இருக்கின்றாய்? எந்த ஊர்? எங்கிருந்து வந்தாய்? உனது சகோதரம் எத்தனை?’ என்று.

அப்படியயாரு சந்தர்ப்பத்தில் அண்ணை என்னைக் கேட்டார், ‘நீ எந்த ஊர்?’ என்று. நான் என்னுடைய ஊரைச் சொன்னதும் உடனே கேட்டார் அப்பாவின் பெயரை. ‘இந்த ஆள் இந்த இடம் தானே?’ என்று. அப்பொழுது நான் சொன்னேன் அவரது மகன் நான் என்று. முதலாவது கேட்ட வசனம், ‘அப்ப என்னத்துக்கு இயக்கத்துக்கு வந்தாய்? உன் அப்பா போராளி என்றால் நீ எதற்கு இயக்கத்திற்கு வந்தாய்?’ என்று.

அப்பொழுது நான் சொன்னேன், ‘இல்லை, பல தடவைகள் இயக்கத்திற்கு வருவதற்கு நான் முயற்சித்து, திருப்பித் திருப்பிக் கொண்டு போய் வீட்டில் விட்டார்கள். நான் தான் கட்டாயத்தின் பேரில் இல்லை இயக்கத்திற்கு வரப் போகின்றேன் என்று சொல்லித்தான் வந்தேன்’ என்று.

‘யார் உன்னை இயக்கத்தில் சேர்த்தார்கள்?’ என்றார். நான் சொன்னேன், சேர்த்தவர்களில் எந்தப் பிழையும் இல்லை. நானாக உணர்ந்து, நானாக இந்தப் போராட்டத்திற்குக் கடமை ஆற்ற வேண்டும் என்று வந்தேன்’ என்று சொல்ல ‘ஓ.கே.’ (சரி) என்றார்.

கேள்வி: உங்களுடைய தந்தை மற்றும் சகோதரர்கள் ? அவர்களைப் பற்றிக் கூறுங்கள்?

பதில்: என்னுடைய தந்தை ஆரம்ப காலத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் ஒரு உறுப்பினர். போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து வேலை செய்தவர். கடைசியாக முள்ளிவாய்க்காலில் வந்து வீரச்சாவைத் தழுவினார். 16ஆம் திகதி இரவுதான் வீரச்சாவடைந்தார்.

குடும்பப் பின்னணி என்று பார்த்தீர்கள் என்றால் எனது அண்ணாவும் போராளியாக இருந்தார். ஆரம்ப காலத்தில் - பின்னர் நான் போராட்டத்தில் போய் வேலை செய்யும் பொழுது - மூன்று பேர் போராட்டத்தில் இருக்கின்றோம் என்று - யாராவது ஒரு ஆள் வீட்டிற்கு செல்லுங்கள் என்று சொன்ன இடத்தில் நான் போக மறுத்து விட்டேன். அப்பாவும் வீட்டிற்குப் போக மறுத்து விட்டார். அண்ணாவும் போக மறுத்தும், கட்டாயத்தில் - இல்லை ‘நீங்கள் போக வேண்டும்தான்’ என்று கூறி வீட்டிற்கு அனுப்பினார்கள்.

கேள்வி: இன்று உங்கள் குடும்பத்தினர் - ஏனையவர்கள் - எங்கே இருக்கின்றார்கள்? நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்?

பதில்: என்னுடைய அம்மா 1996ஆம் ஆண்டு இறந்து விட்டார். அப்பா முள்ளிவாய்க்காலில் இறந்து விட்டார். சகோதரர்களுடன் நான் எந்த விதமான தொடர்பையும் வைத்திருக்க விரும்பவில்லை. என்னால் அவர்களுக்குப் பிரச்சினை வரும் - வந்தும் இருக்கின்றது. ஏனென்றால் நான் இங்கு வந்து ஐக்கிய நாடுகள் சபைக்குச் சாட்சி சொன்னேன். இங்கு ரி.வி சனல்கள் (தொலைக்காட்சிகள்) கேட்ட பொழுது சிறீலங்கா இராணுவம் எங்களுக்கு என்ன செய்தது, முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது, எப்படி காயப்பட்டவர்களை உயிருடன் சுட்டார்கள், என்னுடைய மருத்துவமனையில் வைத்து எப்படிச் சுட்டார்கள் என்பதை நான் வெளியில் சொல்லியிருந்தேன். அதனால் - என்னால் - அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் வரக் கூடாது. ஏனென்றால் அவர்கள் தமது பாட்டில், தமது குடும்பம் என்று இருக்கின்றார்கள். நான்தான் போராட்டத்தில் உள்வாங்கப்பட்ட ஆள். அதனால் நான் அவர்களுடன் எந்த விதமான உறவையும் வைத்திருக்க விரும்பவில்லை.

கேள்வி: நீங்கள் இறுதி யுத்தத்தில் எதிரியிடம் சிறைப்பட்டீர்கள். உங்களுடைய வதைமுகாம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பதில்: முள்ளிவாய்க்காலில் - முள்ளிவாய்க்கால் என்பதை விட வட்டுவாகல் எனலாம். முள்ளிவாய்க்கால் முடிவு, வட்டுவாகல் தொடக்கம். அங்கு தான் என்னுடைய மருத்துவமனை இயங்கிக் கொண்டிருந்தது. 16ஆம் திகதி இரவு சரமாரியாக ரவுண்ஸ் (வெடிச்) சத்தம் கேட்க நாங்கள் வெளியில் பார்த்தோம். காயப்பட்டவர்களை இராணுவம் சுட்டுக் கொண்டு வந்தது. எல்லோரும் கத்துவது கேட்டது - காயப்பட்டவர்கள் கத்துவது கேட்டது.

என்னுடைய காணிக்குள் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட காயக்காரர்கள் இருந்தார்கள் - அந்த மருத்துவமனை காணிக்குள். வந்த இராணுவம் காயப்பட்டவர்கள் என்றுகூட பார்க்கவில்லை - சுட்டுக் கொண்டுதான் வந்தது. சுட்டுக் கொண்டு வரும் பொழுது நாம் வெளியில் வந்த பொழுது ஆமி (இராணுவம்). அப்பொழுது ஒன்றும் செய்ய இயலாது. நாங்கள் கத்தினோம் - எழும்பி ஓடக் கூடிய ஆட்கள் எல்லாம் எழும்பி ஓடுங்கோ, ஆமி - என்று. அப்பொழுது சின்னக் காயங்கள் உள்ளவர்கள் எல்லாம் எழும்பி ஓடி விட்டார்கள், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள். மற்றைய காயக்காரர்களை ஆமி சுட்டு விட்டான். அதில் அவர்கள் எவருமே தப்பவில்லை என்பது உண்மையானது.

சுட்டதை நாம் பார்த்தோம் கண்ணால். பின்னர் நாம் 16ஆம் திகதி இரவு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் பொழுது ஒரு கட்டத்தில் இரண்டு பக்கத்தில் உள்ள ஆமியும் சேர்ந்து விட்டார்கள். வேறு இடம் கிடைக்கவில்லை - ஒன்றுமே செய்ய இயலவில்லை. அப்பொழுது நாங்கள் சனமாக சறத்தை மாற்றிக் கொண்டு சனங்களோடு சனங்களாக நிற்கும் பொழுது - காட்டிக் கொடுப்புக்கள் மத்தியில் - காட்டிக் கொடுக்கப்பட்டு அதில் வைத்து பிடித்துக் கையயல்லாம் கட்டி கடுமையான அடி. காட்டிக் கொடுத்தவர் என்னை டொக்டர் என்று சொல்லித்தான் காட்டிக் கொடுத்தார். அதனால் தான் நான் இன்று உயிர் தப்பியிருக்கின்றேன் என்று நினைக்கின்றேன். அடித்தவுடன் கேட்டான் ‘நீ டொக்டரா?’ என்று. ‘ஓம்’ என்று விட்டேன். ‘ஓம்’ என்றவுடன் அவன் அதில் கேட்கவில்லை - ‘இயக்கமா?’ என்ற கேள்வியை அந்த இடத்தில் கேட்கவில்லை. அதில் வைத்து எனக்கு கடுமையான அடி. அடியயன்றால் - அதில் டபிளாக நேர்சிங் ஸ்ராவ்விற்கு (மருத்துவப் பணியாளர்களுக்கு) - எல்லோருக்குமே அடிதான் கட்டிப் போட்டு.

அடித்து விட்டு அங்கிருந்து கொண்டு வந்து - வட்டுவாகல் பாலத்திற்கு ஊடாக கொண்டு வந்து - முல்லைத்தீவில் உள்ள பழைய டிப்போவிற்கு (தரிப்பிடம்) பின்பக்கம் உள்ள வெட்டையில் கொண்டு வந்து மக்களோடு மக்களாக எம்மை இருத்தி - அவ்விடத்தில் வைத்து இருத்தினார்கள். இருத்தும் பொழுது அதில் உள்ள ஆள் ஒருவர் - இராணுவத்துடன் உள்ள ஒரு ஆள் - என்னைக் காட்டிக் கொடுத்தார். இவர் போராளி மருத்துவர் என்று. அதில் வைத்து என்னைப் போராளியாக இனம் கண்டு என்னை சிறைப்பிடித்தார்கள். அதில் வைத்துக் கையைக் கட்டி - அதில் வைத்து அடி - அடிகளுக்குக் குறைவில்லை. அடியயன்றால் சூ கால் (காலணி), பனை மட்டை - கிடந்த எல்லாவற்றாலும் அடித்தார்கள். எனக்கு மட்டுமல்ல, என்னோடு பிடிபட்ட அவ்வளவு போராளிகளுக்கும். அங்கிருந்து கையிற்கு ஹான்ட் கவ் (கைவிலங்கு) அடித்து - அங்கிருந்து ஓமந்தைக்குக் கொண்டு வந்து, ஓமந்தையில் வைத்து எம்மைப் படம் எடுத்து விட்டு, அங்கிருந்து இறம்பைக்குளம் கேர்ள்ஸ் (மகளிர்) பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விட்டார்கள். அதில் போராளிகள் என்று சொல்லி இரண்டாயிரம் பேரைக் கொண்டு வந்து வைத்திருந்தார்கள். ஆனால் இரண்டாயிரம் பேரும் போராளிகள் அல்ல. பதினைந்து வருடத்திற்கு முன்னர் இயக்கத்தில் இருந்து விலகியர்களையும் போராளிகள் என்று கொண்டு வந்து வைத்திருந்தார்கள். இரண்டாயிரம் பேரில் இயக்கம் என்று பார்த்தால் ஐநூறு பேரும் இல்லை. ஆனால் அவர்களுக்கு யார் இயக்கம் என்று தோன்றினாலும் அவரை அதில் வைத்துப் பிடித்திருந்தார்கள்.

அங்கு கொண்டு வந்து வைத்து - இறம்பைக்குளம் பள்ளிக்கூடத்தில் -  எல்.ஆர்.ஆர்.பி (ஆழ ஊடுருவும் படையணி) என்ற சிறீலங்காவின் ஆழ ஊடுருவும் அணிதான் இறம்பைக்குளம் பள்ளிக்கூடத்திற்குப் பொறுப்பாக இருந்தது. அங்குதான் சித்திரவதைகள் எங்களுக்கு ஆரம்பம். ஒன்றரை லீட்டர் தண்ணீர் போத்தலில் மூன்று தண்ணீர் போத்தல்கள் தருவார்கள் - மூன்று தண்ணீர்ப் போத்தல்களில் தான் தண்ணீர் தருவார்கள். அந்த மூன்று தண்ணீர்ப் போத்தல்களில் தான் குளிக்க வேண்டும் - குளிப்பது மூன்று தண்ணீர்ப் போத்தல்களில் தான். அதில் ஒரு தண்ணீர் போத்தல் ரொய்லட்டிற்கு (கழிவறைக்கு). குளிக்கப் போகும் பொழுது அதில் வைத்து அடிப்பார்கள். நிற்பவன், போகிறவன், வருபவன் எல்லோரும் புட்போல் பந்து (கால்பந்து) மாதிரித்தான் - அந்த இரண்டாயிரம் பேரையும் அங்கு புட்போல் பந்து (கால்பந்து) மாதிரித் தான் வைத்து - நின்றவன், போனவன், வந்தவன் எல்லோரும் அடிதான் - தும்புக் கட்டை. அவர்களுக்குப் பொழுது போகவில்லை என்றால் - என்ன செய்வார்கள் என்றால் ரூமிற்குள் பொடியளை உடுப்பில்லாமல் - உடுப்பைக் கழற்றி விட்டு - அவர்களுக்கு அடிப்பது. தலைகீழாக நிற்க விடுவது. தலைகீழாகக் கட்டித் தூக்குவது. எங்களை ஒரு விளையாட்டுப் பொருளாகத்தான் அங்கு வைத்துப் பயன்படுத்தினார்கள்.

பின்னர் அங்கு ஐ.சி.ஆர்.சிக்கு (செஞ்சிலுவைச் சங்கம்) இவ்வாறு இரண்டாயிரம் பேரைக் கொண்டு வந்து சித்திரவதை செய்கிறார்கள் என்ற விபரம் தெரிய வரும் பொழுது, ஐ.சி.ஆர்.சி உடனடியாக அங்கு வந்தது. ஐ.சி.ஆர்.சி வந்து இரண்டாயிரம் பேரின் விபரத்தை எடுத்தது. அந்த இரண்டாயிரம் பேரின் விபரங்களை எடுப்பதற்கு முன்னரே கிட்டத்தட்ட முன்னுVறு பேரை எடுத்து விட்டார்கள் - அங்கிருந்து கொண்டு போய் விட்டார்கள் - சந்தேகப்பட்டு - இவர்கள் பெரிய ஆட்கள் என்று சந்தேகப்பட்டுக் கொண்டு போய் விட்டார்கள். அதன் பின்னர் தான் ஐ.சி.ஆர்.சி வந்தது. அந்த முன்னுVறு பேரும் எங்கு என்று தெரியாது.

ஐ.சி.ஆர்.சி அங்கு வந்து எங்களின் பெயர், விபரங்களை எடுத்த பின்னர், அங்கிருந்து என்னை ஐநூறு பேருடன் சேர்த்து வவுனியா பூந்தோட்டம் பள்ளிக்கூடத்தில் விட்டார்கள். பூந்தோட்டம் பள்ளிக்கூடத்தில் ஐநூறு பேருடன் வைத்திருந்து - அங்குதான் ரி.ஐ.டி - சிறீலங்காவின் ரெறறிஸ்ட் இன்ரெலிஜென்ற் டிப்பார்ட்மென்ட் (பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு) என்று சொல்லும் அமைப்பு - என்னை அரஸ்ட் (கைது) பண்ணியது. அரஸ்ட் (கைது) பண்ணி வவுனியா ஜோசப் காம்பில் (முகாமில்) கொண்டு போய் வைத்திருந்தார்கள். வவுனியா ஜோசப் காம்பில் (முகாம்) என்னைக் கேட்டிருந்தார்கள், ‘பிரபாகரன் எங்கே, தளபதிகள் எங்கே, தாட்டு வைத்த ஆயுதங்கள் எங்கே?’ என்று. இதுதான் அவர்களின் மூன்று கேள்விகளும்.

இரண்டாவது நான் தளபதி என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். நான் சொன்னேன் ‘நான் தளபதி இல்லை. நான் ஒரு கள மருத்துவர். தேசியத் தலைவர் எங்கு என்று எனக்குத் தெரியாது: தளபதிகள் எங்கு என்பதும் எனக்குத் தெரியாது. ஏனென்றால் நான் மருத்துவமனையில் நின்று வேலை செய்தேன்’ என்று சொன்னேன். ‘இல்லை நீ மருத்துவமனையில் வேலை செய்தாய் என்றால் நீ கடைசியாக இருந்த யஹாஸ்பிட்டலில் (மருத்துவமனையில்) தான் நீ பிடிபட்டுள்ளாய். இவர்கள் தப்பியிருந்தால் உன்னிடம் தான் மருந்துகள் எல்லாமே வாங்கி விட்டுப் போயிருக்க வேண்டும். அல்லது இவர்களுக்கு ஏதாவது நடந்திருந்தால் அந்த விடயம் உனக்குத் தெரியும்.’ அவர்கள் எங்கு என்றுதான் கேட்டிருந்தார்கள்.

நான் சொன்னேன் அது தெரியாது என்று. தெரியாது என்று சொல்லும் பொழுது என்னை அடித்தார்கள் கடுமையாக. தலைகீழாகக் கட்டிப் போட்டு அடித்தார்கள். ரீப்பையால் (பலகை) அடித்தார்கள். காலில் உள்ள பெருவிரல் நகம் இரண்டும் பிடுங்கினார்கள் - கால் பெருவிரல் நகம். நான் சொல்லியிருந்தேன் நான் ஒரு கள மருத்துவர், அதை விட எனக்கு எதுவும் தெரியாது என்று. அவன் சொன்னான்,  - நீ கள மருத்துவர் அல்ல. நீ தளபதி என்பதை ஒத்துக் கொள்- என்று. - நீ கள மருத்துவராய் இருக்கவில்லை. உனது உடல் தோற்றத்தைப் பார்க்கும் பொழுது நீ ஒரு தளபதி: நீ ஒரு சாதாரண போராளியோ அல்லது மருத்துவரோ அல்ல. தளபதி-  என்று. அப்பொழுது நான் சொன்னேன் ‘இல்லை நான் தளபதியாக இருக்கவில்லை: நான் போராளியாகத்தான் இருந்தேன்’ என்று. ஆனால் இந்த இடத்தில் என்னுடைய அப்பா போராளியோ, அல்லது என்னுடைய சகோதரம் போராளியோ என்பதை அதில் நான் சொல்லவில்லை - அங்கு போய் சொல்லவில்லை.

திரும்பவும் நான் எதையும் ஒத்துக் கொள்ளவில்லை என்று வவுனியா ஜோசப் காம்பில் (முகாம்) இருந்து பூசாவிற்கு கொண்டு போனார்கள். பூசாவிலும் கொண்டு போய் இதே விசாரணைதான். பெற்றோல் சொப்பிங்க் பாக் (நெகிழப் பை) போட்டார்கள் முகத்தில். தலைகீழாகக் கட்டி வைத்து அடித்தார்கள். உடுப்புகள் இல்லாமல் அடித்தார்கள். காலில் உள்ள மற்றைய நகங்களையும் பிடுங்கினார்கள் - ஒத்துக் கொள்ளச் சொல்லி.

மற்றையது வயர்களால் (மின்சாரக் கம்பிகளால்) அடித்தார்கள். செயினால் (சங்கிலிகளால்) அடித்தார்கள். மற்றையது இரண்டு மேசைக்கிடையில் கட்டைகளைப் போட்டுக் கையையும், காலையும் கட்டிப் போட்டுத் தொங்கப் போட்டிருந்தார்கள். என்ன செய்வார்கள் என்றால் நடுச்சாமத்தில் - நாம் நித்திரையாக இருக்கும் ரைமில் - கொண்டு போய் நித்திரை கொள்ள விடாமல்தான் அடிப்பார்கள். அடித்துப் போட்டு, விடியற் காலையில் கொண்டு போய் விடுவார்கள். இது எனக்கு மட்டுமல்ல நிறையப் பேருக்கு - சந்தேகத்தின் பேரில் பிடிப்பட்ட ஆட்களுக்கு. இவர் ஒரு தளபதியாக இருப்பார் அல்லது இவரைக் கொண்டு போய் அடித்தால் விசயங்களை எடுக்கலாம் என்றால். அவர்கள் என்ன கேட்டார்கள் என்றால் ‘தாட்டு வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்துத் தா’ இது ஒன்று.

இரண்டாவது ‘எங்கே -  தமிழீழத் தேசியத் தலைவர் எங்கே’ ‘அவரோடு இருந்த தளபதிகள் எங்கே?’ அவையளைச் சொல்லு. ‘அவையளைக் காட்டு. அவர்கள் கடலால் தப்பினார்களா? அல்லது காட்டுக்குள் போனார்களா? அவர்கள் எங்கே?’ இதுதான் அவர்களின் கேள்விகளாக இருந்தது.

அவற்றிற்கு எம்மிடம் பதில் இல்லை என்றால் நீ ஒரு தளபதி என்பதை ஒத்துக் கொள். ரெக்கோர்ட்டை (பதிவு சாதனம்) கொண்டு வந்து வைத்து விட்டு வாய் மூலமாக கேட்பார்கள். நீ தளபதி என்பதை ஒத்துக் கொள் என்று. சில பேர் எல்லாம் - இயக்கத்தில் வந்து மூன்று, நான்கு மாதம் இருந்தவனாக இருப்பான் - அடி தாங்க இயலாமல் - அவன் ஒரு தளபதியாக இருந்திருக்க மாட்டான் -  ‘ஓம்’ என்று சொல்லி விடுவான்.

ஆனால் ‘ஓம்’ சொன்னவர்கள் எங்கு என்பது தெரியாது. ‘ஓம்’ என்று சொன்னால் இரண்டு நாட்களுக்கு அடி இருக்காது. அவன் வந்து சொல்லுவான் ‘எனக்கு அடி இல்லை. நான் கேட்ட பொழுது ஓம் என்று சொல்லி விட்டேன்’ என்று. பின்னர் பார்த்தால் ஆள் இருக்காது. எங்கு கொண்டு போனார்கள், அதற்குப் பின்னர் என்ன நடந்தது என்று தெரியாது. என்னைப் பூசாவில் வைத்து அவ்வளவு அடி அடித்தும், நான் ஒன்றுமே ஒத்துக் கொள்ளவில்லை. திரும்பவும் நான்காம் மாடிக்கு கொண்டு போனார்கள்.

கொண்டு போய் நான்காம் மாடியில் ஏழு நாள் வைத்து கடுமையான அடி. கடைசியில் சொன்னார்கள், நீ ஒத்துக் கொள்ளவில்லை என்றால் உன்னை இல்லாமல் செய்வோம் என்று. ஆனால் எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது - ஐ.சி.ஆர்.சி வந்து என்னைப் பார்க்கும் பொழுது சொன்னது உன்னை எங்கு கொண்டு போனாலும் நாங்கள் உன்னைப் பின்தொடருவோம் என்று - உன்னை எங்கு கொண்டு போனாலும் நாங்கள் உன்னை பின்தொடருவோம். உனது உயிருக்கு ஆபத்தில்லை: ஆனால் உனது சித்திரவதைகளை எங்களால் நிற்பாட்ட இயலாது. சித்திரவதை செய்வார்கள்: உனது உயிருக்கு ஆபத்து இல்லாமல் நாங்கள் பாதுகாத்துத் தருவோம் என்று.

என்னை ஜோசப் காம்பிற்கு (முகாமிற்கு) கொண்டு வரவும், ஐ.சி.ஆர்.சி ஜோசப் காம்பிற்கு வந்து விட்டது. மற்றையது ஐ.சி.ஆர்.சிக்கும் சொல்ல இயலாது - அங்கு நடக்கின்ற சித்திரவதைகள். அப்படி நாங்கள் சொல்வோமாக இருந்தால் - இது முக்கியமான விடயம். நான் பதிவு செய்ய விரும்புகிறேன். ஐ.சி.ஆர்.சி வரப் போகின்றது என்றால், அவ்வளவு போராளிகளுக்கும் சொல்லி விடுவார்கள், ஐ.சி.ஆர்.சிக்கு நாங்கள் செய்கிற எந்த விதமான சித்திரவதைகளையும் நீங்கள் சொல்லுவீர்களாக இருந்து, அந்த விடயம் எங்களிடம் பிடிபடுமாக இருந்தால் - நீங்கள் சொல்லிப் பிடிபடுமாக இருந்தால் - நிச்சயமாக உங்களைக் கொல்வோம். அது ஐ.சி.ஆர்.சி - அடுத்த கட்டம் உங்களைக் கொல்வோம். அந்தப் பயத்தில் ஒருத்தரும் இவர்கள் அடிக்கும் அடியில் - ஐ.சி.ஆர்.சி வந்து கேட்கும் ‘அடித்தவர்களா?’ என்று - முதலில் இல்லை என்று சொல்வோம். அவர்கள் கேட்பதற்கு முதலே சொல்வோம் இல்லையயன்று. ஐ.சி.ஆர்.சிக்கு தெரியும் இவர்கள் முதலில் அடிவாங்கித்தான் இருக்கிறார்கள், ஆனால் சொல்ல இயலாத நிலைமையில் தான் இருக்கிறார்கள் என்றும் தெரியும்.

ஒரு ஜெயலிற்குள் (சிறைக்குள்) இருக்கும் ஆட்களுக்கு ஐ.சி.ஆர்.சி சித்தாலெப்பை (தைலம்) கொண்டு வந்து கொடுக்கின்றது என்றால் -  ஐ.சி.ஆர்.சிக்கு தெரிந்து சித்தாலெப்பை கொடுக்கின்றது என்றால் - சித்தாலெப்பை ஜெயிலில் இருப்பவர்களுக்குத் தேவையில்லை. அந்த அடி, வேதனை - அதை ஓரளவுக்குப் போட்டால் நோவு குறைந்த மாதிரி இருக்கும். நான்காம் மாடியில் பார்த்தீர்கள் என்றால், இரண்டு நாள் சாப்பாடு தரவில்லை. ஒப்புக் கொள் - வொயிஸ் ரெக்கோர்ட்டைக் கொண்டு வந்து கேட்டார்கள் ஒப்புக் கொள் -  நீ தளபதி என்பதை ஒப்புக் கொள். இல்லாவிடின் காட்டித் தா - டம்ப் (பதுக்கி) வைத்திருக்கும் இடத்தைக் காட்டித் தா, உன்னை விடுகிறோம். இதுதான் அவர்களின் கேள்வியாக இருந்தது. சித்திரவதைகள் என்பதற்குக் குறைவே இல்லை. அவ்வளவு போராளிகளையும் அணுவணுவாகச் சித்திரவதை செய்தார்கள்.

கேள்வி: இவை திட்டமிடப்பட்ட முறையில் நடைபெற்றனவா? அல்லது கண்மூடித்தனமாக முறையில் நடைபெற்றனவா?

பதில்: திட்டமிட்டுத்தான் செய்யப்பட்டது. திட்டமிட்டு - என்னவென்று சொல்வது - எங்களை எப்படியாவது ஒரு மனநோயாளியாக மாற்ற வேண்டும். அவ்வளவு போராளிகளையும் மனநோயாளிகளாக மாற்ற வேண்டும் என்பது - என்னுடைய அபிப்பிராயம் - அப்படித்தான் அவர்களின் சிந்தனை இருந்தது. அப்படித்தான் எங்களைக் கையாண்டார்கள் - ஒவ்வொரு போராளிகளையும்.

கேள்வி: நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் உங்களையும், ஏனைய ஆண்களையும் நிர்வாணப்படுத்தி விட்டுத் தாக்குவார்கள் என்று. இதேநேரத்திலே ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் நடைபெற்றது போன்று -பாலியல் வல்லுறவுகள், பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றது போன்று - ஆண்கள் மீதும் நடைபெற்றதாகவும் சில குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இதைப் பற்றிக் கூற முடியுமா?

பதில்: இந்தச் சம்பவம் நடந்தது வவுனியா இறம்பைக்குளம் பள்ளிக்கூடத்தில். வவுனியா இறம்பைக்குளம் பள்ளிக்கூடத்தில் - அதாவது சில ஆண்களைப் பார்த்தால் பெண்களின் தோற்றங்கள் மாதிரி உடைய ஆண்களை - கொண்டு போய் மிஸ் யூஸ் (முறைகேடு) பண்ணினார்கள். அதாவது அவர்களுடைய செக்ஸிற்கு (பாலுணர்வுக்கு) இவர்களை இச்சையாகப் பயன்படுத்தினார்கள். அவர்கள் அதற்கு ஒத்துக் கொள்ளாத சந்தர்ப்பத்தில் அவர்களைக் கடுமையாக அடித்து சித்திரவதை செய்தார்கள். அதேபோல் வவுனியா ஜோசப் காம்பில் (முகாம்) - ஜோசப் காம்பிற்கு உள்ளேதான் எங்களை வைத்திருந்தார்கள் - அதற்குள் பெண் பிள்ளைகளைக் கொண்டு வந்து வைத்திருந்தார்கள். இரவில் எல்லாம் அந்தப் பெண் பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டு போய் - நாங்கள் நேரே கண்ணால் பார்ப்பதில்லை. பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டு போகும் பொழுது நாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தைத் தாண்டித் தான் பெண்களின் இடத்திற்குப் கொண்டு போக வேண்டும். பிடித்துக் கொண்டு போகும் பொழுதே தெரியும். பெண் பிள்ளைகள் வரும் நிலைமையும் - படுமோசமான நிலைமையில்தான் கொண்டு வருவார்கள்.

கேள்வி: நீங்கள் எதிர்கொண்ட சித்திரவதைகள் எவ்வாறான ஒரு சூழலில், அல்லது எந்தவொரு கட்டத்தில் முடிவுக்கு வந்தன?

பதில்: ஒரு கட்டத்தில் -  என்ன நடந்தது என்றால் - எங்களை எல்லா விதத்திலும் விசாரித்துப் பார்த்தும் அது சரிவரவில்லை அவர்களுக்கு. அப்பொழுது தாங்கள் கோர்ட்டிற்கு (நீதிமன்றத்திற்கு) போடப் போவதாகச் சொன்னார்கள். ‘நீங்கள் ஒப்புக் கொள்ளவதாகவில்லை. நாங்கள் கோர்ட்டில் போட்டு உங்களுக்கு கோர்ட்டில் தண்டனை வாங்கித் தரப் போகிறோம்’ என்று. திரும்பவும் எங்களை கொழும்பு ஹை கோர்ட்டிற்கு (உயர் நீதிமன்றத்திற்கு) போட்டார்கள் - நாற்பத்து நான்கு பேரை - நாற்பத்து நான்கு பேரை முதலில் போட்டார்கள். அங்கு நீதிபதி என்னைக் கேட்டார் - ஒரு பெண் நீதிபதி ‘நீ குற்றவாளியா? சுற்றவாளியா?’ என்று. நான் சொன்னேன் எனக்குத் தெரியாது என்று. அவர் கேட்டார் ஏன் தெரியாது என்று. நான் சொன்னேன் ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு நாட்டில்தான் நான் இருந்தேன். நான் இலங்கையில் இருக்கவில்லை. அங்கு ஒரு தனி அரசாங்கத்தின் கீழ்தான் நான் இருந்தேன். அந்த அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்ததால் நீங்கள் கேட்பது - குற்றவாளியா? சுற்றவாளியா? என்பது - எனக்குக் கேள்விக்குறியாக இருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவாளி என்றால் நானும் ஒரு குற்றம் இழைக்கப்பட்டவனாகவே இருப்பேன்’ என்றேன். அவர் சொன்னார் ‘நீ விசித்திரமான ஒரு பதில் சொல்கிறாய்’ என்று. நான் சொன்னேன் ‘எனக்குத் தெரியாது - இந்த நாட்டின் சட்டம் எனக்குத் தெரியாது. நான் போராட்டத்தில் மருத்துவராக இருந்தது உண்மை - கள மருத்துவராக இருந்தது உண்மை. ஆனால் நான் இருந்ததற்கான காரணம் தொடர்ச்சியான - எங்களின் இடங்களில் - விமானத் தாக்குதல், குண்டுத் தாக்குதல், மக்கள் சாவது, பாடசாலை மாணவர்கள், கோவில்கள் எல்லாமே நாசமானதால் நான் போராட்டத்திற்குப் போனேன். நான் இந்தப் போராட்டத்தில் ஆயுதத்தை விரும்பி எடுக்கவில்லை - நானாக விரும்பிப் போய் ஆயுதத்தை எடுக்கவில்லை. ஆனால் இந்தச் சூழ்நிலைகள் என்னை இந்தப் போராட்டத்திற்குள் திணித்தன. சூழ்நிலையால் தான் நான் இந்தப் போராட்டத்திற்குப் போனேன் என்றேன்.

கேள்வி: எவ்வாறு நீங்கள் இறுதியில் விடுவிக்கப்பட்டீர்கள்?

பதில்: கோர்ட்சிற்கு (நீதிமன்றத்திற்கு) போட்டு, கோர்ட்டால் றிமான்ட்டில் (தடுப்பில்) போட்டார்கள். றிமான்டில் வெலிக்கந்தை என்ற இடத்தில் இருக்கும் பொழுது, அங்குள்ள இராணுவக் கப்டன் ஒருவரைப் பிடித்து, அவரோடு கதைத்துக் - காசு தரலாம் வெளியில் விடு - என்று கேட்டேன். முதலில் மறுத்தார். பின்னர் ஒப்புக் கொண்டார். பின்னர் அவருக்குக் காசு கொடுத்தேன். அவர் நான் காயப்பட்ட ஒரு ஆள், இவரை வைத்திருக்க இயலாது என்று சொல்லி - தலையில் காயமிருப்பதால் தலைக் காயப்பட்டவர், இவரை வைத்திருக்க இயலாது என்று சொல்லி - அவர் உள்ளால் வேலை பார்த்து,  ‘ஆறு மாதத்திற்குள் நாட்டை விட்டு வெளியால் போ, இல்லாவிடின் ஆறு மாதத்தால் உன்னைப் பிடித்து விடுவார்கள்’ என்றார். அவர்கள் தந்த கடிதத்தில் ஆறு மாதம் தான் - எக்ஸ்பயரி டேற் (காலவதித் திகதி) ஆறு மாதம் தான் போட்டிருந்தது. அதில் போட்டிருந்தது ‘ஆறு மாதத்தில் இவர் விடுதலைப் புலிகள் சம்பந்தமானது எதிலாவது ஈடுபடுவாராக இருந்தால், இவரை நாங்கள் திருப்பிப் பிடிப்போம்’ என்று.

கேள்வி: இவர்கள் புனர்வாழ்வு அளித்துப் போராளிகளை விடுவித்ததாகக் கூறுவார்கள். உங்களுக்கு அப்படி ஏதாவது நடந்ததா?

பதில்: புனர்வாழ்வு என்று அங்கு ஒன்றுமே இல்லை. சேம் தான் (ஒரே மாதிரித்தான்) - ஜெயில் (சிறை) தான்- அதுவும் ஜெயில் தான். புனர்வாழ்வு என்று சொல்வது ஒருவருக்கு ஒரு தொழிலைக் கற்பித்து, அந்தத் தொழிலை வெளியால் போய் அவர் - அதே தொழிலை - செய்து, அல்லது முன்னுக்கு வர வைப்பதுதான் புனர்வாழ்வு. புனர்வாழ்வு என்ற பெயரில் முன்னுக்கு உள்ள பதாகைகள் - அந்தக் காம்ப்களின் (முகாம்களின்) பதாகைகள் ஒவ்வொன்றும் புனர்வாழ்வு என்று போடப்பட்டிருக்கும். ஆனால் உள்ளுக்குள் அங்கு ஒரு போராளிகளுக்கும் புனர்வாழ்வு என்று இல்லை. அங்கு உள்ளுக்குள்ளும் ஜெயில் (சிறை) தான்.

கேள்வி: புனர்வாழ்வு என்று கூறப்படும் இந்த முகாம்களிலே போராளிகளை சிங்கள தேசிய கீதத்தைப் பாடவேண்டும், சிங்கள தேசிய கொடியின் கீழ் அதற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றெல்லாம் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

பதில்: கட்டாயப்படுத்தப்பட்டது - திணிக்கப்பட்டது. இது தான் உண்மை - திணிக்கப்பட்டது. தேசிய கீதம் பாட வேண்டும் என்பது திணிக்கப்பட்டது. அப்படிப் பாடாவிட்டால் பணிஷ்மன்ற் (தண்டனை) கொடுப்பது - தேசியக் கொடி இறக்கப்படும் பொழுது தேசியக் கொடிக்கு மரியாதை செய்ய வேண்டும். மரியாதை செய்யாவிடின் திணிக்கப்பட்டது. எல்லாமே திணிக்கப்பட்டது. எதுவுமே விருப்பமாக செய்யவில்லை. எங்களுக்கு விரும்பாத விடயத்தை எல்லாம் திணித்தார்கள் ‘செய்’ என்று.

கேள்வி: உங்களுக்கு அது சம்பந்தமான அனுபவங்கள் இருக்கின்றதா? அதை நீங்கள் மறுத்த பொழுது அல்லது மீறிய பொழுது - அவர்களுடைய விதிமுறைகளை?

பதில்: நான் அடி வாங்கினேன் ஒரு தடவை. ஒரு தடவை விடிகாலையில் அவர்களின் தேசியக் கொடி ஏற்றும் பொழுது நான் போகவில்லை. அதனால் என்னை அடித்தார்கள் - போகததால்.

கேள்வி: இப்பொழுது நீங்கள் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றீர்கள். இங்கே நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்?

பதில்: இங்கே நான் இப்பொழுது படித்துக் கொண்டிருக்கிறேன். மற்றையது சரட்டி வேர்க் (அறப்பணி) செய்து கொண்டிருக்கின்றேன். இதுதான் எனது பணி.

கேள்வி: எவ்வாறான அறப்பணிகளை மேற்கொள்கின்றீர்கள்?

பதில்: அறப்பணிகள் - அங்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட போராளிகளுடைய பிள்ளைகள் - போராளிகள் என்பதை விட மாவீரர்களுடைய பிள்ளைகள் - இன்று நிர்க்கதியற்ற நிலையில் இருக்கின்றார்கள். எங்களின் போராட்ட காலத்தில் தமிழீழம் என்ற அமைப்பிற்குள் இருக்கும் பொழுது அந்த மாவீரர்களுடைய குழந்தைகள் - பிள்ளைகள் - நல்ல நிலையில் இருந்தார்கள். இப்பொழுது அதே மாவீரர்களின் மனைவி, பிள்ளைகள் மிகவும் கஸ்ரப்பட்ட நிலையில் இருக்கின்றார்கள். அப்படியான குடும்பங்களுக்கு இங்கு அகதியாக இருக்கின்ற ஆட்களிடம் போய் ஒவ்வொரு குடும்பங்களைப் பாருங்கள் என்று சொல்லி அவர்களை லிங்க் (இணைப்பு) பண்ணி விடுவதும். அதேபோல் இந்தப் போராட்டத்தால் ஊனமுற்று, இரண்டு கால்களை இழந்தவர்கள், இரண்டு கைகளை இழந்தவர்கள், இடுப்புக்குக் கீழே, கழுத்துக் கீழே பரலைஸ்டாக (செயலிழந்து) இருப்பவர்களுக்கு இங்கிருந்து உதவி செய்கின்றேன்.

கேள்வி: நல்லது கள மருத்துவர் உயற்சி அவர்களே, உங்களுடைய நேரத்தை ஒதுக்கி இந்தச் செவ்வியைத் தந்தமைக்காக. நன்றி.

பதில்: நன்றி.

நன்றி: ஈழமுரசு