வதைமுகாம் தொடர்பில் ஒட்டுக்குழுத் தலைவரும் கோரிக்கை விடுத்துள்ளார்

வெள்ளி டிசம்பர் 04, 2015

திருகோணமலையிலுள்ள கடற்படை முகாம்கள் தொடர்பில் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டுமென ஒட்டுக்குழுத் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். இரகசிய தடுப்பு முகாம் இருந்துள்ளதாக சர்வதேச விசாரணையாளர்கள் குழுவினர் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கின்றனர்.

திருகோணமலையில் இருந்ததாகக் கூறப்படுகின்ற இரகசிய தடுப்பு முகாம் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும். அதுபோல் நாட்டில் வேறு எங்காவது இரகசிய தடுப்பு முகாம்கள் இருக்கின்றனவா என்பதையும் தெளிவு படுத்த வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை அரசியல் ரீதியாக வென்றெடுக்காத சில தமிழ் தலைமைகளுக்கு கோப்பாய் மாணவன் செந்தூரனின் தற்கொலைச் செய்தி சுயலாப அரசியல் நடத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது.

தமிழ் மக்களுக்கும் ஏமாற்றுத் தமிழ் தலைமைகளின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்திகள், விரக்திகள் நிறையவே உண்டு. ஆனாலும், தம்மை ஏமாற்றும் தலைமைகளின் தவறுகளுக்காக தற்கொலை செய்யும் முடிவுகளை எந்தவொரு தமிழ் குடி மகனும் எடுக்கமாட்டான். மாறாக, ஏமாற்றும் தமிழ் தலைமைகளின் தவறுகளுக்கு எதிராக போரடவே முற்படுவார்கள்.

அரசாங்கம் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்குமாக இருந்தால் இதுபோன்ற துயரங்கள் தொடர வேண்டும் என்ற தூண்டுதல்கள் இங்கே இருக்காதெனவும் தெரிவித்துள்ளார்.