வருவான் வரிப்புலி! - கவிபாஸ்கர்

சனி நவம்பர் 26, 2016

பிரபாகரன்! இது...
வெறும் பெயர்ச்சொல் இல்லை!
புரட்சியின் குறியீடு!
 
பிரபாகரன்! இது...
வெறும் வார்த்தை இல்லை!
ஒரு இனத்தின் உயிர்ப்பு!
 
பிரபாகரன்!
இரவா புலி!
மறவா! மொழி!
 
அவன் சுற்றும் பூமி
அவனே சுழற்சி!
அவனே எழுச்சி
அவனே அரண்
அவனே அறம்!
 
நெருப்புக்
கர்ப்பம் தரித்துப் பிறந்தவன்!
 
பிரபாகரன்..
கைகால் முளைத்தக் கதிரவன்!
 
துவக்குகளின்
துவக்கம் ‡ பிரபாகரன்
துவண்டுபோகாத
இயக்கம்!
 
காலம் தந்த தலைவன்
காலனை எதிர்த்த மனிதன்
எரிமலை சுமக்கும் குருதி!
எரிகுழல் கக்கும் உறுதி!
 
இவன் பாய்ந்த நாளில்
பயந்தது! சிங்களப்பெளத்தம்
எழுந்தது! தமிழர்ரெளத்தரம்
 
சோழப்பரம்பரை கரிகாலன் எம்
ஆண்ட இனத்தின் எல்லாளன்!
கரும்புலி கண்டெடுத்த கன்னிவெடி
தமிழன் முகவரி மீட்டெடுத்த வரிப்புலி
 
தலைவனுக்கு இன்று
தாலாட்டுத் திருநாள் ‡ அது
எம் அடையாளப் பெருநாள்
 
எம் ஆண் தாய் பிறந்தநாள் இன்று!
ஆம் அது எம் ஆன்மா உயிர்த்த நாள்!
 
தாயின் கர்ப்பபை இருட்டறை ? இவன்
தாயின் இருப்போ நெருப்பறை!
புறநானு?ற்றை படித்த இனம்‡ இன்று
பிரபாகரனை படிக்கிறது!
 
வல்வெட்டித்துறை ? அது
தமிழரின் வரலாற்றுத் துறை!
குறள் எங்கள் மறை ? தலைவன்
குரல் எங்கள் பறை!
 
திசைகள் தோறும்
ஒருநாள் தெரிவான்
எதிரி சுக்குநூறாக
விரைவில் விழுவான்!
 
எல்லாம் முடிந்தது என்று
சிலர் சொல்கிற கதை!
தொடக்கம் தோற்காது என்பது
தலைவன் போட்ட விதை!
 
நந்திக்கடல் ஈரக்காற்றை
கரையேற்றியிருக்கிறது
காற்று செத்து விடாது!
 
பிறந்ததும் அழுகிறவர்கள் நாம்!
அழுகிறவர்களுக்காகப்
பிறந்தவன் பிரபாகரன்
 
மடிந்தவர்களுக்காக
மாரடிப்பவர்கள் நாம்
மடிந்தவர்களுக்காகவே
விடிந்தவன் பிரபாகரன்!
 
வாழும்போதே நாம்
செத்துக் கொண்டிருப்பவர்கள் நாம்
அவன்
செத்துக் கொண்டிருப்பவர்களுக்காக
வாழ்ந்துகொண்டிருப்பவன்!
 
மரணத்தை வென்றதாய்
சொல்கிறவர்கள் நாம்
மரணத்தைக் கொன்றதாய்
சொன்னவன் பிரபாகரன்!
 
சாவைக் கழுத்தில்
கட்டிக்கொண்டு கடந்தவன்
சாவைக் காலால்
எத்திவிட்டு நடந்தவன்!
 
மறப்போர் மறவனை
மறக்க முடியாது!
அறப்போர் இனம் அழிந்து விடாது!
 
உலகில் இவன் போல்
தலைவன் எவன் வாழ்ந்தான்!
முதுகில் இவன் போல்
நெருப்பை எவன் சுமந்தான்!
 
இவன் பெயரை
உச்சரித்தாலே பயப்படுகிறது!
புத்ததேசமும் காந்திதேசமும்!
இவர்களின் பயமே!
அவன் வாழ்வதற்கான சாட்சி!
 
பிறந்த நாள் காணும் புலியே!
சிறந்த நாள் தந்த மொழியே!
ஏங்குகிறோம்! எமது தேசத்தைக் காண
உன்னை எம் தேசத்தில் காண!
 
காவல் தெய்வங்கள்
கண் விழிக்கும் கார்த்திகையில்
காத்திருக்கிறோம்!
எமக்கான தேசம் எமக்கே! என்று
உறுதி ஏற்கிறோம்!
 
பனை மரத்தின் உச்சியில்
செண்பகம் கூவட்டும்!
சிவந்த மண்ணில் செங்காந்தள்
சிரிக்கட்டும்!
வானக் கூரையில்
புலிக் கொடி பறக்கட்டும்!
 
ஆம்! பொருத்திருங்கள்
இரவு விடியாமல் போகாது!
சூரியன் மறைந்தாலும்
மடியாது!

- கவிபாஸ்கர்