வறட்சி காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பொருளாதாரம் பாதிப்பு

யூலை 17, 2017

வறட்சி, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாத்தளன், புதுமாத்தளன், அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம், இரணைப்பாலை, ஆனந்தபுரம், தேவிபுரம், சுதந்திரபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், சாலை கடல் நீரேரியை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இந்த கடல் நீரேரியில் 2,500 இற்கும் மேற்பட்ட மக்கள் மீன்பிடியில் ஈடுபட்டு தமது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

எனினும், கடந்த பல நாட்களாக நிலவும் கடும் வறட்சியினால், சாலை கடல் நீரேரி பாரியளவில் வற்றிப்போயுள்ளது. நீர் வற்றியுள்ளமையாலும், நீரேரியின் உவர் தன்மை அதிகரித்துள்ளமையாலும், மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குகின்றன. இதனால் சாலை கடல் நீரேரியை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மீன்பிடியை முழுமையாக நம்பி வாழும் இந்த மக்கள் வறட்சியால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், செய்வதறியாது இறந்த மீன்களை சேகரித்து அவற்றை கருவாடாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனூடாக தமது பொருளாதார தேவையை ஓரளவாவது தீர்க்க முடியும் என்பதே இவர்களின் நம்பிக்கையாகும்.

இதேவேளை கடும் வறட்சியால் புத்தளம் மாவட்ட மக்களும் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் வறட்சி நீங்கி மழை பெய்ய வேண்டி புத்தளத்தில் இன்று தொழுகை மற்றும் துஆ பிரார்த்தனை நடத்தப்பட்டது. மழை வேண்டி தொழுகையும் துஆ பிராத்தனையும் புத்தளம் இஜிதுமா மைதானத்தில் இன்று காலை நடத்தப்பட்டது. இலங்கை ஜம்மியத்துல் உலமா புத்தளம் கிளையும் மொஹிதீன் ஜூம்ஆ பள்ளியும் இணைந்து இந்த துஆ பிரார்த்தனையை ஏற்பாடு செய்திருந்தன.

செய்திகள்