வலி.வடக்கில் சட்டவிரோத கல் அகழ்வு, பிரதேச செயலாளரும் பிரதேச சபைத் தவிசாளரும் உடந்தையா? மக்கள் கேள்வி

யூலை 12, 2018

தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட வித்தகபுரம் கிராம அலுவலர் பிரிவு, இளவாலை வடக்கு, நகுலேஸ்வரம், பலாலி கிழக்கு, பலாலி தெற்கு பொற்கலம்தம்பை ஆகிய பிரதேசங்களில் சட்டவிரோத கல் அகழ்வு இரவிரவாக இடம்பெறுகின்றது. 

படையினரின் ஆதரவுடனும் வலி.வடக்கு பிரதேச செயலர் சி.சிவஸ்ரீ மற்றும் வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோரின் ஆதரவுடனும் இந்தச் செயற்பாடு இடம்பெற்று வருகின்றது என்று அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

வலிகாமம் வடக்கு பிரதேசம் படையினரின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தபோது அங்கிருந்து நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளில் கல் அகழ்ந்து தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. 

படையினர் தென்னிலங்கையில் உள்ள நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இங்கு கல் அகழ்வதற்கு அனுமதி வழங்கி பெரும்தொகைப் பணத்தைச் சுருட்டிக்கொண்டனர். தமிழர் பிரதேசம் ஆழ்துழைக் கிடங்குகளாக மாறின. 

தற்போது படையினர் மேற்படி பிரதேசங்களை விடுவித்த பின்னர் இங்கு கல் அகழ்வு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்தச் செயற்பாட்டை வலி.வடக்கு இணையம் என்ற முகப்புத்தகம் வெளிப்படுத்தியிருக்கின்றது. 

இங்கு கல் அகழப்பட்டால் எதிர்காலத்தில் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும் எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

இங்கு இவ்வாறு பாரிய மோசடி நடைபெற்றிருக்கும் நிலையில், இது தொடர்பாக பிரதேச செயலரும் பிரதேச சபைத் தவிசாளரும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலம் அவர்களும் இதன்மூலம் பெருந்தொகை நிதியை இலஞ்சமாகப் பெற்றுக்கொள்கின்றனர் என்ற உண்மை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர். 

இணைப்பு: 
செய்திகள்