வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இந்திய அரசு செயல்படுகின்றது -பிரணாப் முகர்ஜி

இந்தியாவின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாக நாடாளுமன்ற வரவு செலவுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உரையுடன் துவங்கியுள்ளது.
வறுமையை நாட்டில் இருந்து ஒழிப்பதே முதல் கடமையாக இருக்க வேண்டும் என பிரணாப் முகர்ஜி தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில்,நாடாளுமன்றம் விவாதங்கள் நடத்தவும், ஆலோசனைகள் மேற்கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட தளமே தவிர, அமளிகளால் முடங்குவதற்கான இடம் அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பொறுப்புக்களை உணர்ந்து நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அவரின் உரையில்,’ஏழைகள், விவசாயிகள் நலனைப் பேணுவதிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் அரசு கவனம் செலுத்துகின்றது. விவசாயிகள் நலனே தேசத்தின் வளத்தை உறுதி செய்யும். எனவே உணவு தானிய உற்பத்தியில் அரசு அதிக கவனம் செலுத்துகின்றது. 2015-ல் அதிக அளவில் யூரியா உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தால் அந்நிய நேரடி முதலீடு 39% அதிகரித்துள்ளது. ஜன்தன் யோஜனா திட்டம் முன்னோடித் திட்டமாக விளங்குகின்றது. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி திட்டங்களால் கடைநிலை மக்களும் காப்பீடு பெறுகின்றனர். 2019 மார்ச் மாதத்துக்குள் பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 78 ஆயிரம் கிராமப்புறங்கள் தரமான சாலைகளால் இணைக்கப்படும். உலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவும்போதும்கூட இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஏல முறைகளில் அரசு வெளிப்படைத் தன்மையை பின்பற்றுகின்றது. இந்திய பாதுகாப்புத் துறையில் அதிநவீன போர்த் தளவாடங்கள் இடம்பெறுவதை அரசு உறுதி செய்துள்ளது. ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை அரசு நிறைவேற்றியுள்ளது. உணவு உத்தரவாத திட்டத்தின் கீழ் 15 கோடி மக்கள் பயன்பெறுகிறார்கள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.