வாஜ்பாய் உடல் இன்று மாலை தகனம்!

வெள்ளி ஓகஸ்ட் 17, 2018

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் இன்று மாலை 4 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில்  நேற்று  மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

வாஜ்பாய் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் அவரது உடலுக்கு இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக் கப்படுவார்கள். அதன்பிறகு உடல் அங்கிருந்து, டெல்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு காலை 9 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், மதியம் 1 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. வாஜ்பாயின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அங்கிருந்து ஊர்வலமாக காந்தி சமாதி மற்றும் இந்திரா காந்தி சமாதி அருகே உள்ள ‘ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல்’ என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
 
அங்கு மாலை 4 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படுகிறது. வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல்வேறு மாநிலங்களின் முதல்- மந்திரிகள், கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

வாஜ்பாய் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாக வாழ்ந்தவர். அவருக்கு நமீதா கவுர் பட்டாச்சார்யா என்ற வளர்ப்பு மகள் மட்டும் உள்ளார்.