வாடகை வீடுதேடி அலையும் யதார்த்த வாழ்க்கையை படமாக்கினேன்!

சனி ஏப்ரல் 14, 2018

வாடகை வீடுதேடி அலையும் யதார்த்த வாழ்க்கையை படமாக்கியிருப்பதாக சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது வென்றுள்ள ‘டூலெட்’ படத்தை இயக்கிய செழியன் தெரிவித்துள்ளார். 

65-வது தேசிய விருது பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை ‘டூலெட்’ என்ற படம் பெற்றுள்ளது. இன்னும் திரைக்கு வராத இந்த படம் 30 சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ளது. பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறது.

திரைக்கு வருவதற்கு முன்பே பல்வேறு நாடுகளில் பாராட்டு பெற்ற இந்த படம் உருவானது எப்படி. ‘டூலெட்’ படத்தின் கதை என்ன என்பது குறித்து இதன் இயக்குனர் செழியனிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு:-

நமது ஊரில் வாடகை வீடு தேடி அலைவது பெரிய வி‌ஷயம். இதில் உள்ள சிக்கல்கள், சிரமங்கள் என்ன என்பதை யதார்த்தமாக சொல்வதே ‘டூலெட்’ படத்தின் கதை.

நமது குடும்பத்தில் எத்தனையோ வி‌ஷயங்கள் நடக்கின்றன. இதை மற்ற நாட்டினரும் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளதை உள்ளபடியே திரைப்படமாக்கி இருக்கிறேன்.

வெளிநாட்டு படங்களை நாம் ஆச்சர்யமாக பார்க்கிறோம். நமது நாட்டில் நடக்கும் வி‌ஷயங்களை அவர்கள் அதிசயமாக பார்க்கிறார்கள் என்பதற்கு ‘டூலெட்’ படம் உதாரணம். இது 30 நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் பாராட்டை பெற்றது. 17 விருதுகளையும் பெற்றிருக்கிறது.

 

இந்த படத்தின் நாயகன் சந்தோஷ், நாயகி ஷீலா, குழந்தை நட்சத்திரம் தருண் ஆகியோர் தான் முக்கிய பாத்திரங்கள். ஒரு சாதாரண குடும்பம் வீட்டை மாற்றும் சூழ்நிலை ஏற்படுகிறது. வாடகை வீடு தேடும் அவர்கள் எப்படிப்பட்ட சிரமங்களை சந்திக்கிறார்கள் என்பதை எப்படி சொல்ல விரும்பினேனோ அதற்கு அவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்து இருக்கிறார்கள்.

சாதாரணமாக எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இப்போது தேசிய அங்கீகாரமும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மட்டுமல்ல, என் படக்குழுவுக்கும், தமிழ் திரை உலகின் யதார்த்தத்துக்கும் கிடைத்த பெருமை.

நமது கலாசாரத்தை அனைவரும் அறியச் செய்யும் வகையில் இந்த படத்தின் கதை அமைந்திருப்பது அனைவரையும் கவர்ந்திருக்கிறது. நான் கல்லூரி, பரதேசி, தாரைதப்பட்டை, ஜோக்கர் உள்பட 10 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறேன். இந்த படத்தை முதல் முறையாக இயக்கி இருக்கிறேன். நமது வாழ்க்கை முறையை வெளி நாட்டவரும் அறிய வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற படங்களை எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதனால்தான் வெளிநாட்டு பட விழாக்களில் இந்த படத்தை பங்குபெற செய்தேன். விரைவில் தமிழகத்தில் ‘டூலெட்’ திரைக்கு வரும்.  இவ்வாறு அவர் கூறினார்.