வார்த்தைகள் கடந்த அழுத்தங்களே தமிழர்களுக்கான நீதியை விரைவுபடுத்தும்!

நவம்பர் 06, 2017

தமிழர்களின் குரலாக சர்வதேசம் பேச முற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாக இருப்பினும், வெற்று வார்த்தையுடன் நின்றுவிடாது சிறிலங்கா அரசிற்கு அழுத்தங்களை கொடுப்பதன் மூலமே தமிழிர்களுக்கான நீதியை விரைவுபடுத்த முடியும்.

உண்மை நிலை குறித்து நேரடியாக அறிந்து கொள்ளும் நோக்கில் சிறிலங்காவிற்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீப் அவர்கள் தனது மதிப்பீடு மற்றும் பரிந்துரைகளை அறிவித்துள்ளதன் அடிப்படையில் நோக்கும் போது தமிழர்களின் குரலாக சர்வதேசம் பேச முற்பட்டுள்ளமை வெளிப்படுகின்றது.

தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகிய தமிழர்களின் தேசிய அபிலாசைகளை உள்ளடக்கியதான விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அமைதிப் பேச்சுக்களின் போதும் சந்திப்புக்களின் போதும் இவ்விடயங்களையே வலியுறுத்த்திக் கூறிவந்திருந்தனர். அத்துடன் முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் தமிழர் தரப்பில் இருந்தும் இவ்வாறான கருத்துக்களே வலியுறுத்தப்பட்டு வந்திருந்தது.

தமது பிராந்திய உலக வல்லாதிக்க நலன்களை முன்னிறுத்தி கண்மூடித்தனமாக செயற்பட்டிருந்த சர்வதேசம் உண்மைகளை மூடிமறைத்து தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது. நீதி நியாயம் பேசும் சர்வதேசம் தமிழர்கள் விடயத்தில் இழைத்த மாபெரும் தவறாக இவ்விடயம் அமைந்துள்ளதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

காலம் கடந்த நிலையில் இன்று ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் வெளிப்படுத்தியிருக்கும் நிலைப்பாடானது வெறுமனே வார்த்தைகளுக்குள் முடங்கிவிடாது செயலுருப்பெற வேண்டுமாயின் வார்த்தைகள் கடந்த அழுத்தங்களே தமிழர்களுக்கான நீதியை விரைவுபடுத்தும் என்பதனை இந்நேரத்தில் வலியுறுத்திக் கூறக்கடமைப்பட்டுள்ளோம்.

சர்வதேசத்தின் மீது தமிழர்கள் வைத்திருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் காப்பாற்றும் வகையில் காத்திரமான நடவடிக்கைகளுக்கான அடித்தளமாக ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணரின் பரிந்துரைகளை கவனத்தில் எடுத்துக் கொள்வதோடு தமிழர் தாயகத்தில் நடைபெற்ற, நடைபெற்றுவரும் தமிழின அiழிப்பு நடவடிக்கைகளுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டனைக்குள்ளாக்கவும் அதன் அடிப்படையில் தமிழர்களது தேசிய அபிலாசைகளை நிறைவேற்றவும் சர்வதேச சமூகம் உறுதியாக செயற்பட வேண்டுமென உலகத் தமிழர்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

சிறிலங்கா அரசின் ஏமாற்று நாடகங்களை இனியும் நம்பி காலத்தை வீணடிப்பதானது சர்வதேசமும் தவறுக்கு துணைபோவதாகவே அமையும். வெறுமனே செயலுருப்பெறாத சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளை சிறந்த முன்னேற்றமாக ஏற்று அங்கீகரிப்பதானது கடந்த காலத் தவறுகளின் நீட்சியாக அமைந்துவிடுவதுடன் தீர்விற்கான பாதையில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் வெகுவாக விலத்திச் செல்லவே வழிவகுக்கும்.

ஆகவே, இந்த நூற்றாண்டு கண்டிராத மாபெரும் இன அழிப்பினை மேற்கொண்டவர்களை காப்பாற்ற முனையும் சிறிலங்கா அரசை தடவிக்கொடுத்து தத்தமது நலன்களை மீள்உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை பிராந்திய, உலக நாடுகள் உடனடியாக கைவிட்டு தமிழர்களுக்கான நீதியை விரைவுபடுத்தும் நடவடிக்கைகளை எடுப்பது மிக மிக அவசியமாகும்.

செய்திகள்
ஞாயிறு January 07, 2018

ஜனவரி மாதம் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை), ஒஸ்ரேலியா மெல்பேர்னில் East Burwood Reserve மைதானத்தில் கேணல் கிட்டு ஞாபகார்த்த ”தமிழர் விளையாட்டு விழா 2018” நடைபெறவுள்ளது.

வியாழன் January 04, 2018

இலங்கை அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்குத் துணைபோகின்ற ஊடகமாகவே  ரூபவாகினி செயற்பட்டது