விக்கிலீக்ஸ் வெளியிட்ட புதிய ஆவணங்கள்!

புதன் மார்ச் 08, 2017

வால்ட் 7 என்ற பெயரில் விக்கிலீக்ஸ் பல்வேறு புதிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இம்முறை இடம்பெற்றுள்ள தகவல்கள் கேஜெட்கள் சார்ந்து பல்வேறு ரகசியங்களை தெரியப்படுத்தியுள்ளது.

ஐஸ்லாந்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் விக்கிலீக்ஸ், வால்ட் 7 என்ற பெயரில் புதிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சிஐஏ-வின் (CIA) பல்வேறு ரகசியங்களை இந்த ஆவணங்கள் அம்பலப்படுத்தி உள்ளது.

மத்திய புலனாய்வு அமைப்பில் இருந்து சுமார் 9000 ஆவணங்களை விக்கிலீக்ஸ் இம்முறை வெளியிட்டுள்ளது. அதிகப்படியான ரகசிய ஆவணங்கள் ஒரே கட்டத்தில் கசிந்திருப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில் சிஐஏவின் ஹேக்கிங் திறன் சார்ந்த ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாதனங்களை கொண்டு சிஐஏ எவ்வாறு உங்களை ஹேக் செய்கிறது என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம். 

சாம்சங் ஸ்மார்ட் டிவி:

நீங்கள் வீட்டில் வைத்து பயன்படுத்தும் சாம்சங் ஸ்மார்ட் டி.வி.யினை உளவு பார்க்கும் சாதனமாக மாற்ற சிஐஏ கருவி ஒன்றை வடிவமைத்து பயன்படுத்துகிறது. சாம்சங் ஸ்மார்ட் டி.வி.க்கள் உங்களது குரல்களை அவ்வப்போது பதிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை செட்டிங்ஸ் மூலம் செயல் இழக்க செய்ய முடியும். 

ஆனால் சிஐஏ கண்டறிந்துள்ள புதிய கருவி உங்களது ஸ்மார்ட் டிவி ஆஃப் ஆனதை போன்று காட்சியளிக்க செய்து உங்களது உரையாடல்களை பதிவு செய்யும். இதற்கென சிஐஏ வீப்பிங் ஏஞ்செல் (Weeping Angel) என்ற மென்பொருளை பயன்படுத்தி வருகிறது. 

என்க்ரிப்ட் செய்யப்பட்ட செயலி:

ஸ்மார்ட்போன்களில் பொதுவாக நீங்கள் பயன்படுத்தும் என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ள செயலிகளில் நன்மை மற்றும் தீமை இருக்கும். நன்மை அனைவருக்கும் தெரியும், ஆனால் இதன் தீமையை தான் சிஐஏ உருவாக்கியுள்ளது. அதன் படி சிஐஏ நினைத்தால் போனின் இயங்குதளத்தை ஹேக் செய்து உங்களின் தரவுகளை அலசி ஆராயந்து பார்க்க முடியும். இவ்வாறு செய்ய உங்களது தனிப்பட்ட சாதனம் ஹேக் செய்யப்பட்டிருக்க வேண்டும். 

கூகுள் மற்றும் அப்பிள் இயங்குதளங்கள்:

அப்பிள் மற்றும் கூகுள் இயங்குதளங்களில் பல்வேறு பிழைகளை சிஐஏ கண்டறிந்துள்ளது. இவற்றை கொண்டு பொது மக்களின் தரவுகளை இயக்க முடியும். எனினும் இதுபோன்ற பிழைகளை சரி செய்து விட்டதாக அப்பிள் தெரிவித்துள்ளது. இது குறித்து கூகுள் சார்பில் எவ்வித விளக்கமும் வழங்கப்படவில்லை. 

மால்வேர், வைரஸ், மென்பொருள்:

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில் சிஐஏ 1000க்கும் அதிகமான மால்வேர் அமைப்புகள், வைரஸ்கள், ட்ரோஜான் மற்றும் சாதனங்களை கட்டுக்குள் கொண்டு வரும் மென்பொருள்களை உருவாக்கி வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஹேக்கிங் வழிமுறைகள் ஆண்ட்ராய்டு போன், ஐபோன், ஸ்மார்ட் டிவி மற்றும் மைக்ரோசாப்ட் சாதனங்களை ஹேக் செய்யும் வல்லமை கொண்டவை என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.  

ஸ்மார்ட் கார் மென்பொருள்:

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில் ஸ்மார்ட் கார்களை கட்டுக்குள் கொண்டு வரும் வழிமுறைகளை சிஐஏ உருவாக்கி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வழிமுறைகள் எவ்வாறு சாத்தியமாகும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. என்றாலும் சிஐஏ உருவாக்கியுள்ள வழிமுறைகள் முறையானது தான் என சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.