விக்கி வடக்கையும் சம்பந்தன் கொழும்பையும் காப்பாற்றத் துடிக்கின்றனர்!

June 19, 2017

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழீழ மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு தன் கடமைகளைச் செய்துவருகின்றார் என இந்திய ஈழத் தமிழர் நட்புறவுக் கழகத்தின் தலைவர் காசியானந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் அரசியல் குழப்பம் தொடர்பாக அவர் அண்மையில் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தந்தை செல்வாவின் அறப்போராட்டத்தின் மூலமும், தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தின் மூலமும் தமிழீழ விடுதலைக்காக போராடிய பேராற்றல் இன்று உலகம்முழுவதும் பரவி பல முனைகளில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நெருக்கமான காலகட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக விளங்குகின்றார். தற்போது தமிழரசுக் கட்சி தமிழீழம், கொழும்பு என இரண்டாகப் பிரிந்துள்ளது.

கொழும்பு தமிழரசுக் கட்சிக்கு இரா.சம்பந்தன் தலைமை தாங்குகின்றார். அவர், அடிக்கிறவனுக்கும் உதைக்கிறவனுக்கும் நோகாமல் விடுதலை பெறவேண்டும் என நினைக்கிறார்.

தமிழீழத்தை நிலையாகப் பெற்றுக்கொள்ளவே தந்தை செல்வா போராடினார். ஆனால், சம்பந்தனோ, முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்தபின்னரே தமிழீழத்தைக் கைவிட்டோம் என அறைகூவல் விடுத்தார்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் நன்றியுணர்வோடு நாங்கள் விக்னேஸ்வரனப் பார்க்கின்றோம். கொழும்பில் வாழ்ந்த விக்னேஸ்வரன் தமிழீழ மண்ணை காப்பாற்த் துடிக்கிறார். தமிழீழத்தில் பிறந்த சம்பந்தன் கொழும்பைக் காப்பாற்த் துடிக்கிறார்.

பிரபாகரன் தமிழர்கள் போற்றவேண்டிய ஒரு தலைவர் என விக்னேஸ்வரன் மேடைகளில் முழங்கினார். ஆனால் சம்பந்தனோ பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி என இந்தியாவிலிருந்து வரும் இந்தியன் எக்ஸ்பிரசில் அறிக்கை விடுகிறார்.

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டுமென்கிறார் விக்னேஸ்வரன், ஆனால் கொழும்பிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுமந்திரன் விசாரணை முடிந்துவிட்டது என அறிக்கை விடுகிறார்.

எனவே தமிழீழ மக்களுக்காக போராடிக்கொண்டிருக்கும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக போராடும் இளைஞர்களை தான் போற்றுவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்திகள்