விடுதலைக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தீர்வு காண தவறினால் அது துரதிஷ்டமாக அமையும்!

Friday October 12, 2018

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தீர்வு காண தவறினால் அது துரதிஷ்டமாக அமையுமென யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்ணமீனன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் நடைபவணி மூன்றாவது நாளான நேற்றிரவு வவுனியா ஒமந்தை பகுதியினை அடைந்தது.

அதன் பின்னர் ஒமந்தை பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) வவுனியா நகரைச் சென்றடையவுள்ளதாக குறிப்பிட்ட கிருஷ்ணமீனன், நாளை முழுவதும் சிங்கள மக்கள் வாழ்கின்ற பிரதேசத்திற்கு பயணம் செய்யவுள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.

அரசியல் கைதிகள் தமது வாழ்வின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்துவிட்டார்கள். அவர்களுக்கு தண்டனை வழங்கியிருந்தால், இதுவரை சிறையில் கழித்த காலமே தண்டனைக் காலமாக அமைந்திருக்கும். இந்நிலையில், கட்சி பேதமின்றி செயற்பட்டு அவர்களின் விடுதலைக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இதன்போது வலியுறுத்தினார்.

அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசியல் ரீதியான தீர்மானம் எடுத்து அவர்களை விடுவிக்க முடியுமென குறிப்பிட்ட அவர், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் அரசாங்கத்துடன் பேசி இம்முறையாவது தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென தெரிவித்தார். அவ்வாறு தீர்வுகாண தவறினால் அது ஒரு துரதிஷ்டவசமாக அமையுமென மேலும் குறிப்பிட்டார்.