விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசு ஊழியர் அய்க்கியப் பேரவை - செயற்குழுக்கூட்டத் தீர்மானங்கள்!

திங்கள் செப்டம்பர் 14, 2015

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அரசு ஊழியர் அய்க்கியப் பேரவையின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் இன்று (13-09-2015), சென்னை, அசோக் நகர், அம்பேத்கர் திடலில் நடைபெற்றது.  பேரவையின் தலைவர் அரசாங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பேரவையின் பொதுச்செயலாளர் கடலூர் பாவாணன் முன்னிலை வகித்தார்.

 

இக்கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாவட்டத் தலைவர், மாவட்டச் செயலாளர், மாவட்ட நிதிச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.  மேலும், இணைக்கப்பட்ட பல்துறை மாநிலச் சங்கங்களிலிருந்து முன்னணிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

அரசு ஊழியர் அய்க்கியப் பேரவையின் காப்பாளரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கான பாதுகாப்பு, பேரவையின் நிர்வாக மறுகட்டமைப்பு மற்றும் 2016-ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு நிதி வழங்குதல் ஆகியவை குறித்து மாவட்ட, மாநில பொறுப்பாளர்களால் விரிவாக விவாதிக்கப்பட்டது.

 

அனைவரது ஆலோசனையையும் ஏற்றுக்கொண்ட மாநில மைய அமைப்பு கீழ்க்கண்ட முடிவுகளை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.


பேரவையின் காப்பாளர் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு உயர் வலையப் பாதுகாப்பு வழங்க வேண்டுமென இந்திய, தமிழக அரசுகளை இப்பேரவை வலியுறுத்துகிறது.

 

றபேரவையின் காப்பாளர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு கட்சியே சுயபாதுகாப்பு மேற்கொள்வதற்குத் தேவைப்படும் அதிநவீன வாகனம் வாங்குவதற்கும், அதற்கான நிதித் தேவையை ஈடுகட்டுவதற்கும் பேரவை சார்பில் பெரு நிதியை வழங்குவது என்று முடிவு செய்யப்படுகிறது.


பேரவையின் கால எல்லை கடந்து பொறுப்பிலிருப்பவர்களை விரைவில் மாற்றி புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதென இம்மாநிலப் பேரவை முடிவெடுக்கிறது.


எதிர்வரும் 2016ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு பேரவை சார்பில் தேர்தல் நிதி வழங்குவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.


இறுதியில் பேரவையின் காப்பாளரும் கட்சியின் தலைவருமான எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் அரசு ஊழியர்களின் சமூகநீதிப் பணி எவ்வாறு அமைய வேண்டுமென விளக்கமாக உரையாற்றி கூட்டத்தை நிறைவு செய்தார்.

 

மேற்கண்ட செய்தியினை தங்கள் ஊடகத்தில் வெளியிட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

- வன்னிஅரசு
மாநில செய்தித் தொடர்பாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி