விதவைகளின் வாழ்வு ???

March 16, 2017

கால்களில் தேய்ந்த நிலையில் பழைய செருப்பும், சாயம் வெளிறிப்போன சல்வார் உடை, கைகளிலும், காதுகளிலும் கழுத்திலும் பித்தளை நகைகள் புதுக்குடியிருப்பு – இளங்கோபுரத்தைச் சேர்ந்த விமோஜினி என்ற விதவைத்தாயின் வறுமை நிலையை வெளிப்புறமாக காண்பித்து நிற்கின்றன. வியர்க்க விறுவிறுக்க வந்தவரின் நிகழ்கால வாழ்க்கை எம்மில் பலரும் கனவிலும் நினைத்துப் பார்க்க விரும்பாதது.

யுத்தத்தின் போது கணவர் உயிரிழந்ததன் பின்னர் தனது குடும்பம் மிகவும் வறிய சூழலை முகங்கொடுத்து வருவதாக அவர் தனது கவலைகளை கொட்டித்தீர்த்தார்.  

”மூத்த பிள்ளட பிறந்த தினத்தன்று ஒரு ‘டொபி ஐ கூட அவனுக்கு வாங்கிக் குடுக்க முடியாத பாவியாகிவிட்டேன்” என கண்ணீர் விடுகின்றார் புதுக்குடியிருப்பு - இளங்கோபுரத்தைச் சேர்ந்த விமோஜினி.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த சுப்பிரமணியன் சீலன் (விமோஜினியின் கணவர்) இறுதி யுத்தம் நிறைவடைவதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்னதாக 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி சீல்செய்யப்பட்ட சவப்பெட்டியில் பூதவுடலாக வந்திருந்தார்.  

தனக்கு இருந்த ஒரேயொரு உறவு இல்லாது போனதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் அழுது கதறுகின்றார் விமோஜினி. அழுது என்ன பயன்? சீலன் மீண்டும் வரப்போவது இல்லையென அவளுக்குத் தெரியும். ஆனாலும் அவளது கவலை அதுவல்ல, இதற்கு பின்னர் தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் யார் பாதுகாப்புக் கொடுப்பது? குடும்பப் பொருளாதார நிலைமையை எவ்வாறு சமாளிப்பது? இவ்வாறு பல கேள்விகளுக்கு விமோஜினியிடம் பதிலில்லை. அதுவே அவளது கதறலுக்குக் காரணம்.

வடக்கு மாகாணத்தில் விமோஜினி போன்று விதவைகளாகி நிற்கும் பல்லாயிரக்கணக்கான பெண்களின் நிலைமையும் இதேபோன்று தான் காணப்படுகின்றன.

யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் 29,378 பேரும் முல்லைத்தீவில் 6,294 பேரும் கிளிநொச்சியில் 6,170 பேரும் வவுனியாவில் 5,802 பேரும் மன்னாரில் 6,888 பேரும் என்ற வகையில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுவதாக மகளிர் அபிவிருத்தி நிலையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனினும், சுமார் 90,000 விதவைகள் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் (அல்ஜசீரா – 2015) அரசியல்வாதிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கிய தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கையை ஆட்டிப்படைத்த கொடிய யுத்தம் 30 வருடங்களின் பின்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. (சரியோ, பிழையோ யுத்தம் நிறைவடைந்துவிட்டதென பெருமூச்சு விடுவதோடு நிறுத்திக்கொள்கின்றேன். வேறு விமர்சனங்களைக்கூற விரும்பவில்லை) உயிரிழப்புகள், சொத்தழிவுகள், மக்கள் மனதில் இருந்த “உயிர் அச்சுறுத்தல் பயம்” ஓரளவு நீங்கியது. இந்த சிறிய தீவில் மூன்று தசாப்தகாலம் இடம்பெற்ற யுத்தத்தில் எவ்வளவு இழப்புகள். இலங்கையின் வரைபடத்தில் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் காணப்பட்ட பல கட்டடங்கள், பாதைகள், ஏன் மக்கள் குடியிருப்புகள் (குறிப்பாக நாட்டின் வடக்கு, கிழக்கில்) முற்றாக அழிவடைந்தும், சிதைந்தும் போயுள்ளன. அது எல்லாவற்றையும்விட விலை மதிக்க முடியாத ஆயிரக்கணக்கான மனித உயிர்களை யுத்தத்தின் பசிக்கும் விரும்பியும் விரும்பாமலும் இரையாக்கிவிட்டோம்.

எத்தனையோ பிள்ளைகள் தாய் தந்தையரை இழந்தார்கள், பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இழந்தார்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரை பலரும் பலிகொடுத்தோம். இறுதியில் அதிகமான பெண் தலைமைத்துவ குடும்பங்களை (விதவைகள்) உருவாக்கி சாதனை படைத்தோம். அவ்வாறானதொரு சாதனைக்கு மிகச்சிறந்த உதாரணமே விமோஜினியின் கதை.

கடந்த எட்டு வருடங்களாக தனது பிள்ளைகளுடன் ஒருவேளை உணவிற்குக்கூட கஷ்டப்படும் விமோஜினியின் குடும்ப வறுமையை சொல்லில் விபரிக்க முடியாதவை. கணவர் இருந்தவரை எந்தவித பிரச்சினையும் அவருக்கு இருக்கவில்லை. யுத்தம் முடிவடைந்தாலும் இவரது வாழ்க்கைக்கான போராட்டம் இன்னமும் முடிவுபெறவில்லை. யுத்தத்தின் பின்னர் வீட்டுத்திட்டத்தில் புறக்கணிப்பு, உறவினர்கள் உதவவில்லை. இந்த நிலையில், கூலி வேலை செய்தே தினமும் அவரும் அவரது பிள்ளைகளுக்கும் பசியை போக்க வேண்டியுள்ளது. எனினும் எத்தனை நாட்களுக்கு இந்த போராட்டம். “மூன்று வேளையும் ஒழுங்காகச் சாப்பிட்டு பல நாட்கள்” என்கிறார் விமோஜினி. “அவர் இருந்த காலத்தில எந்த கஷ்டமும் இல்ல. மூன்று நேரம் உணவு, உடுக்க உடை எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் போன பின் இயக்கம் மாதம் 10,000 ரூபா தந்தது. அதுவும், 2009 மே மாதத்துடன் இல்லாமல் போட்டு. இந்த நிலமையில எப்படி வாழ முடியும்” என்பதே அவரது கேள்வியாக உள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற கொடிய யுத்தம் ஆயிரக்கணக்கான விதவைகளை உருவாக்கியது. விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து யுத்தத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் மனைவியர் மாத்திரமல்ல புலிகளுடன் தொடர்புகளைப் பேணியமையால் சந்தேகத்தின் பேரில் கைதாகி, காணாமல் போனவர்கள், காணாமல் போனவர்களின் மனைவிமார் என பல்வேறு வழிகளில் விதவைகள் உருவாகியுள்ளார்கள்.

30 வருட கால யுத்தம் வடக்கில் வாழும் பெண்களின் வாழ்க்கையை சீரழித்து என்றால் அது மிகையல்ல. யுத்தம் முடிவுற்றதன் பின்னர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விதவைகளின் பிரச்சினை முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. அத்தோடு, அதன் உண்மையான தாக்கம் இப்போதுதான் வெளிப்படத் தொடங்கியுள்ளது. பொருளாதார ரீதியில் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு தற்பொழுது முகம்கொடுத்து வருவதாகவும், இந்தப் பெண்கள் தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுவதற்கான போதிய பொருளாதார வசதிகள் இன்றி சிக்கித் தவிப்பதாகவும், கடந்த எட்டு வருடங்களில் அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் பெரியளவில் முன்னெடுக்கப்படவில்லை எனவும் வறுமையில் வாடும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பெரிதாக எதையும் அரசாங்கமோ அல்லது தொண்டு நிறுவனங்களோ செய்துவிடவில்லை எனவும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் செயலாளர் தெரிவிக்கின்றார்.

2014ஆம் ஆண்டு அரசாங்க புள்ளிவிபரங்களின்படி இலங்கையில் உள்ள பெண்களின் மத்தியில் வேலையின்மை 65 விகிதமாக உள்ளது. பெண்கள் வேலையற்று இருக்கும் முதல் நான்கு மாவட்டங்களில் முல்லைத்தீவும் ஒன்றாக காணப்படுகின்றது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு உதவும் வகையில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு சுய வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 5.43 மில்லியன் ரூபாய்களை கடந்த 2015 ஆம் ஆண்டு ஒதுக்கியது. இந்த திட்டத்தின் கீழ் 181 குடும்பங்களுக்கு மாதாந்த உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், சமுர்த்தி ஊடாக பல உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டும் வருகின்றன. எனினும் “யானைப் பசிக்கு சோளப் பொரி“என்ற கதையே எமக்கு ஞாபகம் வருகின்றது. உண்மையில் உதவித்திட்டங்கள் பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்றடையவில்லை என்பதற்கு விமோஜினி கூறும் காரணங்கள் சான்றுபகர்கின்றன. “அவர் செத்து எட்டு வருசமா போச்சு, யாரும் உதவி செய்யல்ல அரசாங்கம் தாரதெல்லாம் பாதிக்கப்பட்டாக்களுக்கு போறதில்ல அப்படி வந்திருந்தா நான் இப்படி  கஷ்டப்பட தேவயில்ல” என்கிறார் வினோஜினி.

“வடக்கிலுள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகளின் முதலாவது பிரச்சினை வடமாகாணத்தில் உள்ள மொத்த மக்கள் தொகை விகிதத்தில், பெண்களின் எண்ணிக்கை மிகவும் உயர்வாக உள்ளது. யுத்தத்தில் ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால், நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. இரண்டாவது குடும்பத்தை காப்பாற்றுவதற்கு வருமானம் தேடவேண்டிய மட்டுமல்லாது, பிள்ளைகளை பராமரித்தல் போன்ற மேலதிக சுமைகளும் விதவைகள் மீது விழுந்துள்ளன. இந்தக் காரணங்கள் பெண்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவிக்கின்றார்.

தற்போது பெண்ணொருவர் தனியாக சமூகத்தில் வாழ்வது நடுக்கடலில் தவிக்க விடப்பட்டதை போன்ற ஒரு நிலை. விசேடமாக தனது குடும்பத்தை காப்பாற்றும் சுமையை எற்றுக்கொண்டுள்ள பெண்கள் நாதியற்றவர்களாக விடப்பட்டுள்ளார்கள். அநேகமாக ஆண்கள் அவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதும் அதிகரித்துள்ளதால், அவர்கள் சில இடங்களுக்கு வேலைக்குச் செல்ல அஞ்சுவதாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்காக பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுக்கும் ‘அமரா’ நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட தலைவி அசோக்குமார் மேரி பிளோமினா தெரிவிக்கின்றார்.

“விதவைகள் வயது போனவர்கள் மாத்திரமல்ல. 18 முதல் 80 வயது வரை விதவைனள் இருக்கின்றார்கள். வயது போனவர்களுக்கு வேலைக்குச் செல்வது இயலாத காரியம். இளம் வயதினருக்கு வேலைக்குச் சென்றால் பாதுகாப்பு பிரச்சினை காணப்படுகின்றது. ஆகவே வறுமை அவர்களை மேலும் வாட்டுகின்றது” என்பது அவரது கருத்தாக காணப்படுகின்றது.

இலங்கையில் மொத்தமாகவுள்ள ஒன்பது மாகாணங்களிலும் 30 வருட யுத்தம் இனம், மொழி மற்றும் மதம் கடந்து விதவைகளை உருவாக்கியுள்ளது.  எனினும் “கூடுதலான விதவைகளை கொண்ட மாகாணம்” என்ற பெயரை வட மாகாணத்திற்கு பெற்றுத்தந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 19 கிராம சேவகர் பிரிவுகளிலும் 1,863 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுகின்றனர். இதில் 61 பெண்களின் கணவர்மார் காணாமல் போயுள்ளனர். (அவர்களுக்கு என்ன நடந்தது என இதுவரை அரசாங்கம் அறிவிக்காத நிலையில், அவர்களை பாதி விதவைகள் (half widows) பட்டியலிலேயே சேர்க்க வேண்டியுள்ளது). உறவினர்கள், அரசாங்கம், நண்பர்கள் கைவிட்ட பின்னர் எங்கு செல்வதென தெரியாமல் நிர்க்கத்திக்குள்ளாகியிருக்கும் அந்த பெண்கள் எவ்வளவு துன்பங்களை அனுபவிக்கின்றார்கள் என்பதைக் கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை.

“இறுதி யுத்தத்ததில் என் கணவர் இறந்துட்டார். நானும் ரெண்டு பிள்ளைகளும் என் அம்மாவும் தான். கணவர் போன பிறகு அம்மாவோட சேர்ந்து கூலி வேலக்கி போறனான். அந்த வருமானத்தில் தான் குடும்பம் நடக்குது” என்கின்றார் முல்லைத்தீவு மந்துவில் பகுதியைச் சேர்ந்த ஜெனோவியஸ் ஜெமிலா. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் கணவனை இழந்த இளம் பெண்களில் ஜெமிலாவும் ஒருவர். இன்று வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் அவரை அவரே மீட்டாளன்றி வேறு எவரும் இல்லை.

“ஒரு மகன இயக்கம் பிடிச்சுட்டு போனது. பெய்ந்து அவர் சடலமாதான் வந்துசேர்ந்தார். இவரும் என்ட ரெண்டு பிள்ளைகளும் ஆமிக்குள்ள போனா பின்ன நான் தேடாத இடமில்ல, பேய்ந்து கேம்ப்ல நானும் மகளும்தான் இருந்தம். இது வரைக்கும் எந்த தகவலும் இல்ல“ என்கிறார் வள்ளிபுனத்தைச் சேர்ந்த தியாகராஜ மேரி புஸ்பம். ஒரு குடும்பத்தின் நான்கு தூண்களை இழந்த ஒரு தாயின் கண்ணீரை எவ்வாறு விபரிக்க முடியும்.

இறுதி யுத்தம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தனது இரண்டாவது மகனை செல் தாக்குதலுக்கு பலிகொடுத்த புஸ்பம், இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட புதுமாத்தளன் பகுதியில் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த தனது கணவர், மூத்த மற்றும் மூன்றாவது மகன் உள்ளிட்டவர்களுக்கு என்ன நடந்தது என இதுவரை எவ்வித பதிலும் இன்றி காத்திருக்கின்றார்.

தனக்கிருந்த ஒரே ஆறுதலான மகளுடன் முகாமிலிருந்து வெளியேறி பாழைடைந்த தனது வீட்டில் மீள்குடியேறிய புஸ்பத்திற்கு எவ்வித உதவிகளும் இல்லை. மகளுடன் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்க்கையை நடத்திச் செல்லும் அவர் ஒரு நடைபிணமாகவே காலத்தை கழிக்கின்றார்.   

ஒரு விதவைக்கு மறுமணம் என்பது தமிழர்களை பொருத்தவரையில் மிகப்பெரிய குற்றமாகப் பார்க்கப்படுகின்றது. இதனைவிட கணவனை இழந்த பெண்கள் தங்களது தனிப்பிட்ட விருப்பு வெறுப்புக்களைத் தாண்டி இன, மத மற்றும் மொழி கலாசாரத்திற்கு ஏற்ப வாழப் பழகிக் கொள்கின்றார்கள். இவர்கள் தொடர்ந்து தனியாகவே வாழ்வதன் மூலம் வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்கள் மறுமணம் செய்வார்களாயின் வரப்போகும் கணவர் விசுவாசமானவராக இருப்பாரா அல்லது தனது பிள்ளைகளை ஏற்றுக்கொள்வாரா என்கின்ற சந்தேகங்களும் விதவைகள் மத்தியில் எழுகின்றன.

தென்னாசிய நாடுகளைப் பொறுத்தவரையில் பெண்களுக்கான மதிப்பு, சுயகௌரவம், உரிமைகளை வழங்குவது என்பது பேச்சளவிலேயே காணப்படுகின்றது. மேலைத்தேய நாடுகளை பொறுத்தவரையில் அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் இங்கு நிலைமை தலைகீழாகவே காணப்படுகின்றது. உலகின் முதலாவது பெண் பிரதமரை உலகிற்கு தந்த நாடு என பெருமைப் பேசிக்கொண்டிருக்கும் எமது நாட்டில் இன்னமும் நாடாளுமன்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் 6 வீதத்தை தாண்டவில்லை. இந்த அடிப்படையில் நோக்குமிடத்து எந்தவொரு தேவைக்கும் ஆண்களில் தங்கியிருக்கும் பெண்கள் கணவரை இழந்த பின்னர் என்ன ஆவார்கள் என்பது சொல்லித்தெரிய வேண்டிய விடயமல்ல.

ஒவ்வொரு பெண்ணையும் விதவைகளாக்கி வறுமையில் தள்ளியது கொடிய யுத்தம், அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுத்து, அவர்களது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது இந்த சமூகம். இவர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த வேண்டியது யாருடைய பொறுப்பு? 

சண்முகநாதன் பார்தீபன்

செய்திகள்
சனி April 21, 2018

புலம்பெயர் வாழ் தமிழ்ச் சிறார்களின் தாய்மொழிக் கல்விக்கு வழிசமைக்கும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பிரான்சு...

ஞாயிறு April 08, 2018

விடுதலைப் புலிகளிடம் உயிருடன் பிடிபட்டபோது அந்த சிங்கள இராணுவச் சிப்பாய் தன் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே எண்ணியிருந்தான்.