விமர்சனம் என்பதே இங்கு இல்லை!

வெள்ளி ஜூன் 08, 2018

சினிமா விமர்சகர்களைத் துணிந்து விமர்சித்திருக்கிறார் ‘காளி’ படத்தின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி. “மேலோட்டமான விமர்சனங்கள் சினிமாவின் தரத்தை உயர்த்தவோ இயக்குநர்கள் சிறந்த படங்களை எடுக்கவோ ஊக்கப்படுத்த உதவாது” என்று அனல் தெறிக்கப் பேசுகிறார். அவருடன் உரையாடியதிலிருந்து…

‘காளி’ படத்துக்கான விமர்சனங்கள் அனைத்தும் சொல்லி வைத்தாற்போல் ஒரேமாதிரி இருக்கின்றன என்று முதல்முறையாக இயக்குநர்கள் தரப்பிலிருந்து குமுறியிருக்கிறீர்களே?

இந்தக் குமுறல் இன்று நேற்றல்ல, காலந்தோறும் படைப்பாளிகளிடம் வெளிப்பட்டுவருவதுதான். மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா தமிழில் சினிமா விமர்சனம் என்பது வளரவே இல்லை, இன்னும் படப்பிடிப்பு குளுகுளுவென இருந்தது என்றுதான் விமர்சிக்கிறார்கள் என்று குமுறினார்.

நான் கூற வருவது, ஒரு வரிக்கதையைக் கொண்டு எடுக்கப்படும் படங்களை விமர்சிப்பது எளிது. முதன்மைக் கதாபாத்திரத்தின் முக்கிய பிரச்சினை, திரைக்கதையின் வேகம், காட்சியமைப்பு, நடிப்பு, எடிட்டிங், ஒளிப்பதிவு, இசை என்று விமர்சிக்கலாம். அதில் சிக்கல் இருக்கப்போவதில்லை. ஆனால் ஒரு வரிக்கதையாக இல்லாமல் பல ‘லேயர்’களைக் கொண்ட ஒரு திரைக்கதையை, நன்கு கவனித்து பொறுப்புடனும் ஆழமாகவும் விமர்சனம் செய்ய வேண்டும். எனது ‘காளி’ படத்தில் பல கதைகள் இருந்தன. அக்கதைகளை இணைக்கும் புள்ளிதான் கதையின் நாயகன். ஆனால் ‘காளி’யில் கையாளப்பட்டிருப்பது ஒருவரிக் கதை என நினைத்துத்தான் அனைவருமே விமர்சனம் செய்தார்கள். இது எனக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.

எங்கே இந்தத் தவறு நடக்கிறது என்று பார்த்தபோது ஒன்று தெளிவாகத் தெரிந்தது. யூடியூப் உட்பட இணையத்தில் விமர்சனம் செய்யும் அனைவருமே படம் பார்த்து முடித்த அடுத்த அரைமணிநேரத்தில் தங்கள் விமர்சனத்தை ‘அப்லோட்’ செய்து, பார்வையாளர்களை விரைவாக ஈர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

விமர்சகர்களுக்குள் நடக்கும் இந்தப் போட்டியில் இரண்டு வருடம் செலவழித்து படமெடுக்கும் என்னைப்போன்ற இயக்குநர்களின் உழைப்பை உதாசீனப்படுத்திவிடுகிறார்கள். வேகமாக விமர்சனம் தரவேண்டும் என்பதில் ஒருவர் விமர்சனத்தை இன்னொருவர் பார்த்து காப்பி அடிக்கும் காமெடியும் இங்கே நடக்கிறது. இதையெல்லாம் விமர்சனம் என்று எப்படி எடுத்துக்கொள்வது?

‘காளி’ யூடியூப் விமர்சனங்களில் எந்த அம்சம் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லை?

காலத்துக்கேற்ற கதையை கையாளவில்லை என்ற மழுங்கிப்போன விமர்சனத்தைக் கூறவேண்டும். காலத்துக்கேற்ற கதையைத்தான் ஒரு இயக்குநர் படமாக்க வேண்டும் என்று எந்த விதியும் கிடையாது. சினிமா தொடங்கியது முதல் இன்றுவரை ‘தேவதாஸ்’ படமாக்கப்படவில்லையா? ‘காளி’ படத்தை 90-களின் காலகட்டத்துக் கதையாகவே நான் வலிந்து எடுத்திருப்பதை ‘செட் பிராப்பர்டிகளை’ வைத்துக்கூட இவர்களால் அவதானிக்க முடியவில்லையே. செட் பிராப்பர்டிகள் மட்டுமல்ல, படத்தில் வரும் ஹெலிகாப்டர் முழுவதும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ். இதுபோல் விமர்சகர்கள் தவறவிட்டது அதிகம்.

‘காளி’ விமர்சனம் எத்தனை மேலோட்டமாக இணையத்தில் செய்யப்பட்டது என்பதற்குத் திரைக்கதையின் முக்கியமான உத்தியையே இவர்களால் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை என்ற ஒன்று போதும். கிராமத்தில் விஜய் ஆண்டனியின் நண்பனாக வரும் யோகிபாபு, “உங்க அப்பாவை தேடிக் கண்டுபிடிக்கிறதுல உன்னைவிட எனக்குத்தான்பா அதிக ஆர்வமா இருக்கு” என்று கூறுகிறார். யோகி பாபுவின் பார்வையில் விஜய் ஆண்டணியின் அப்பா, அவரைப்போலத்தானே இருந்தாக வேண்டும்.

துணைக் கதாபாத்திரத்தின் இந்த ‘மிஸ் லீடிங்’ கோணம்தான் திரைக்கதையில் உத்தியாக இடம்பெறுகிறது. யோகி பாபுவின் பார்வையில்தான் ஃபிளாஷ்பேக்குகளில் விஜய் ஆண்டனியே வருகிறார். சின்ன வயசு நாசர், நாசராகவேதான் இருக்கணும்; சின்ன வயசு ஜெயபிரகாஷ், அவராகவேதான் இருக்கணும் என்பது எத்தனைத் தேக்கமான ரசனை? இந்த முரண்பாட்டை பார்வையாளர்கள் திரையரங்குகளில் ரசித்து ஏற்றுக்கொண்ட அளவுக்கு விமர்சகர்கள் ஏற்றுக்கொள்ளாதது அவர்களது தேடலின்மையையும் தேர்ச்சியின்மையையும்தான் காட்டுகிறது.

சினிமா விமர்சனங்கள் ஒரு படத்தின் வசூல் வெற்றி, தோல்விக்குக் காரணம் என்பதை நம்புகிறீர்களா?

சின்ன படங்களுக்கு உயிர் மூச்சு கொடுப்பதிலும் அவற்றின் மூச்சை அடக்கிக் கொல்வதிலும் விமர்சனங்களுக்கு நிச்சயமாகப் பங்கிருக்கிறது. ஆனால் அஜித், விஜய் மாதிரியான பெரிய நடிகர்களின் படங்களை விமர்சனம் பாதிப்பதில்லை. படம் நல்லாயிருக்கு, நல்லாயில்லை என்பதையெல்லாம் மீறி மக்கள் பெரிய நடிகர்களின் படங்களைப்போய் பார்க்கிறார்கள். சின்ன படங்களை 2.5 லட்சம் பேர் வந்து பார்க்கிறார்கள் என்றால் 3.5 கோடி ரூபாய் வசூல் கிடைக்கும். இவர்களைத் தவறான விமர்சனங்கள் மூலமாகத் திரையரங்குக்குப் போகவிடாமல் செய்துவிட்டால் அந்தப் படத்தின் கதி, அதோ கதிதான்.

விமர்சகர்களை எதிர்த்துத் துணிவுடன் விமர்சித்ததன் பின்னணியில் பிரலமான அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் ஒரு காரணமா?

இல்லவே இல்லை. எப்போதுமே என்னை நான் அப்படி நினைத்துக்கொண்டதில்லை. நான் தைரியமாக இணைய விமர்சனங்களை விமர்சிக்கக் காரணம் ஆடியன்ஸுடைய பாசிட்டிவான ஃபீட்பேக், முதல்நாள் முதல் காட்சியிலிருந்தே எனக்குக் கிடைத்து வந்ததுதான். இப்போதும் ஒரு இயக்குநராகத் துணிந்து கூறுகிறேன். பார்வையாளர்களின் ரசனைத் தேர்ச்சிக்கும் விமர்சகர்களின் ரசனைத் தேர்ச்சிக்குமே பெரிய இடைவெளி இருக்கிறது. விமர்சகர்களைவிடப் பார்வையாளர்கள் சிறந்த விமர்சகர்களாக இருக்கிறார்கள். எனக்குப் பேசிய பெரும்பாலான பார்வையாளர்கள் ‘இத்தனை எண்டர்டெயினிங்கான, புத்திசாலித்தனமான படத்தை எதிர்பார்த்து வரவில்லை, நிறைவான படமாக இருந்தது’ என்று பாராட்டினார்கள்.

படைப்பாளிகளுக்கும் விமர்சகர்களுக்குமான இடைவெளி குறைய நீங்கள் வைக்கும் யோசனைகள் என்ன?

சினிமா என்றில்லை, எந்தக் கலையை விமர்சனம் செய்தாலும் அதுபற்றிய முழுமையான அறிவையும் அதில் தற்போது நிலவிவரும் நவீன போக்குகளையும் விமர்சகர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். உலக அளவில் சினிமா விமர்சனம் எப்படி வளர்ந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது இன்னும் நல்லது. கலையை எப்படி நேசித்து அதில் ஒரு படைப்பாளி ஈடுபடுகிறாரோ அப்படி விமர்சனத்தையும் ஒரு கலையாக நேசித்து இதில் இறங்க வேண்டும். வேறு வேலை கிடைக்காதவர்களும் அதிகப் பார்வையாளர்களை ஈர்த்து வருவாய் பார்க்க வேண்டும் என்று விமர்சனத்தை ஒரு தொழிலாக செய்ய விரும்புகிறவர்களும் விமர்சனத்துக்குள் வராமல் இருப்பது சினிமாவை குறிப்பாக நல்ல முயற்சிகளைக் காப்பாற்றும்.

படைப்பாளிகளுக்கும் விமர்சகர்களுக்கும் இடையிலான இடைவெளி குறைய வேண்டும் என்றால் இருதரப்பும் விமர்சனம் குறித்து ஆரோக்கியமாகக் கலந்துரையாட வேண்டும். பயிற்சிப் பட்டறைகளைக்கூட இருதரப்பும் இணைந்து முன்னெடுக்கலாம். அதற்கு அழைத்தால் முதல் ஆளாக நான் வரவும் தயாராக இருக்கிறேன். அங்கே விமர்சனம் குறித்து இன்னும் ஆழமாகப் பேசுவேன்.