விமான கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான குஜராத் வியாபாரி!

ஒக்டோபர் 31, 2017

கடந்த ஜூன் மாதம் நடைமுறைக்கு வந்த விமான கடத்தல் தடுப்புச் சட்டத்தில் கீழ் முதன் முறையாக ஜெட் ஏர்வேஸ் விமானத்தை கடத்தியுள்ளதாக மிரட்டல் கடிதம் எழுதி நாடகமாடிய குஜராத் நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் இருந்து மும்பைக்கு நேற்று 115 பயணிகளுடன் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் கழிவறையில் ஒர் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

விமானம் கடத்தப்பட்டுள்ளதாகவும், விமானத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நோக்கி திருப்ப வேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இதனை படித்த விமான சிப்பந்திகள் உடனே பைலட்டிடம் விஷயத்தை கூற விமானம் அவசரமாக அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டது. 

இதனையடுத்து, விமானத்தை முழுவதுமாக சோதனையிட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அச்சுறுத்தும் வகையிலான பொருட்கள் எதையும் கண்டெடுக்கவில்லை. இதனையடுத்து, விமானிகள், சிப்பந்திகள் மற்றும் 115 பயணிகளையும் அதிகாரிகள் பல மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தினர்.

விசாரணையின் போது, விமானம் கிளம்பியதும் கழிவறையில் டிஷ்யூ பேப்பர்கள் காணமல் போனதால், புதிய டிஸ்யூ எடுக்க சிப்பந்தி சென்றுள்ளார். இடைப்பட்ட நேரத்தில், குஜராத்தை சேர்ந்த சல்லா பிரிஜ்ஜு என்ற தொழிலதிபர் மட்டுமே கழிவறையை பயன்படுத்தியுள்ளார். புதிய டிஷ்யூ வைக்க சிப்பந்தி வரும் போது ஒரு துண்டுச்சீட்டு கிடந்துள்ளது. அந்த சீட்டில் தான் மேலே கண்ட மிரட்டல் வாசகம் எழுதப்பட்டிருந்தாக சிப்பந்திகள் கூறினர்.

இதன் பின்னர், தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட சல்லா பிர்ஜு விமானங்களில் பறக்க தடை விதித்து விமான துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

மிரட்டல் கடிதத்தை சல்லா தான் எடுத்து வந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து, சல்லா பிரிஜ்ஜு விமான கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். கடந்த ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்த இந்த சட்டப்பிரிவு விமான பணியாளர்கள், பைலட்கள், காவலாளிகள் மற்றும் பயணாளிகளை கடத்தினால் ஆயுள் தண்டனை அளிக்கும் வகையில் திருத்தப்பட்டது.

இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் நபர் சல்லா பிரிஜ்ஜு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை விசாரித்து வரும் காவல் இணை ஆணையர் ஜே கே பாட் கூறும் போது, “ மிரட்டல் கடிதத்தை திட்டமிட்டு சல்லா கொண்டு வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வேறு ஏதும் சமூக விரோதிகளுடன் தொடர்பு உள்ளதா? என்பதை விசாரித்து வருகிறோம். தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) கோரிக்கை விடும் பட்சத்தில் இந்த வழக்கு அவர்கள் வசம் ஒப்படைக்க தயாராக உள்ளோம்” என அவர் கூறினார்.

செய்திகள்