விரைவில் சினிமா அடுத்த கட்டத்துக்கு செல்லும்! சேரன்

Tuesday October 31, 2017

விரைவில் சினிமா அடுத்த கட்டத்துக்கு செல்லும் என்று '6 அத்தியாயம்' இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சேரன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் விளையாடும் காலம் இது. அப்படி ஒரு வித்தியாசமான நல்ல முயற்சி தான் '6 அத்தியாயம்'. பல குறும்படங்களை ஒன்றிணைத்து 'அந்தாலஜி' படங்களாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் இது அப்படி அல்ல. ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவின் சமீபத்திய ஹிட் ட்ரெண்டான ஹாரர் பாணியில் அமைந்திருப்பது படத்தின் வெற்றியை பறை சாற்றுகிறது. 'ஆஸ்கி மீடியா ஹட்' எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குனருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இன்னொரு அத்தியாயத்தை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார். இவர்களுடன் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ்,  ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், குறும்பட உலகில் பிரபலமான ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரும் மீதி நான்கு அத்தியாயத்தை இயக்கியுள்ளார்கள்.

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ‘தொட்டால் தொடரும்’ நாயகன் தமன், ‘விஜய் டிவி புகழ்’ விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், ‘குளிர் 100’ சஞ்சய், ‘நான் மகான் அல்ல’ வினோத், பேபி சாதன்யா ஆகியோருடன் மேலும் பல புதுமுகங்கள் இந்த ஆறு அத்தியாயங்களிலும் நடித்திருக்கிறார்கள்.
 
படத்தின் ப்ரோமோ சாங்கை ‘விக்ரம் வேதா’ புகழ் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப்பாடலை விஜய் டிவி புகழ் மா.கா.பாஆனந்த் மற்றும் கவிதா தாமஸ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். 

இந்த '6 அத்தியாயம்' படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் இயக்குநர் பார்த்திபன், இயக்குனர்கள் சேரன், வெற்றிமாறன், எஸ் எஸ் ஸ்டான்லி, சசி, ரவிக்குமார், மீரா கதிரவன், அறிவழகன், ஏ வெங்கடேஷ், தாமிரா, தயாரிப்பாளர் இயக்குனர் சுரேஷ் காமாட்சி, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும்  இசையமைப்பாளர் தாஜ்நூர் ஆகியோர் கலந்து கொண்டனர். '6 அத்தியாயம்' படத்தின் இசைத்தகட்டை இந்த படத்தின் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன் அவர்களின் தாயார் பிரேமாவதி வெளியிட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டனர்.

இதில் இயக்குனர் சேரன் பேசும்போது, ‘கேபிள் சங்கர், சங்கர் தியாகராஜன் இருவருக்கும் நன்றி. ஒரே படத்தில் 6 டீம்களை அறிமுகப்படுத்தியிருப்பதற்கு தான் அந்த நன்றிகள். 60 பேருக்கு வாழ்க்கை அமைத்துக்கொடுத்திருக்கிறீர்கள். இதுபோன்ற முயற்சிகள் நிறைய வரவேண்டும். இதுதான் நல்ல மாற்றம். புதிய இயக்குனர்கள் எல்லோருக்கும் ஹீரோக்களை நினைத்து பயம் இருக்கிறது. ஆனால் விரைவில் அவர்களுக்கு நல்ல காலம் வரவிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் சினிமா அடுத்த கட்டத்துக்கு செல்லும். தியேட்டர்களை விட வீடுகளுக்குள் நம் படங்கள் உள்ளே செல்லும். அப்போது இந்த இளைஞர்களுக்கு தான் எதிர்காலம். இனி சினிமாவை நினைத்து பயப்பட வேண்டியதில்லை. இணையம் அதற்கான பெரிய ப்ளாட்ஃபார்மாக மாறும்’ என்றார்.