வீட்டினுள் புகுந்த சிறிலங்கா காவல் துறை!

Saturday September 22, 2018

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வீடொன்றினுள் புகுந்து மோட்டார் சைக்கிளொன்றினை போக்குவரத்து காவல் துறையினர்  எடுத்துச்சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகர்ப்பகுதியில் இருந்து தாண்டிக்குளத்தில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரொருவரை போக்குவரத்து காவல் துறையினர்  மறித்துள்ளனர். எனினும் குறித்த இளைஞன் நிறுத்தாமல் சென்று தனது வீட்டினுள் மோட்டார் சைக்கிளை விட்டுள்ளதுடன் தானும் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

இளைஞனை பின்தொடர்ந்த காவல் துறையினர் இளைஞனது வீட்டிற்குள் சென்று இளைஞனை தாக்கியதுடன் இழுத்து வரவும் முற்பட்டுள்ளனர். எனினும் இளைஞனின் தந்தை மற்றும் உறவினர் அவரை விடாமையினால் அங்கு பெருமளவில் சீருடையில் குவிந்த போக்குவரத்து காவல் துறையினர்  இளைஞனை வெளியில் வருமாறு மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்ததுடன் குடும்பத்தினருடனும் இளைஞனை வெளியில் விடுமாறு கோரினர்.

இந் நிலையில் இளைஞன் வெளியில் வராததால் வீட்டு வளவினுள் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்த காவல் துறையினர்  அதனை கொண்டு சென்றிருந்தனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்ததுடன் சிவில் உடையிலும் காவல் துறையினர்  அங்கு நின்றதுடன் புகைப்படம் மற்றும் காணொளி  எடுத்த இளைஞர்களை அழைத்து விசாரணைகளையும் மேற்கொண்டிருந்தனர்.