வெலிக்கடை சிறைச்சாலை சித்திரவதைக் கூடமாக மற்றப்பட்டுள்ளது!

Thursday September 13, 2018

சிறிலங்கா தலைநகர் கொழும்பிலுள்ள வெலிக்கடை சிறைச்சாலை சித்திரவதைக் கூடமாக மற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் வெலிக்கடை சிறைச்சாலை மீது இராணுவத்தினரைக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 27 கைதிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சாட்சியாளரான சுதேஷ் நந்திமால் தெரிவித்துள்ளார்.

பெண் கைதிகள் தமது அடிப்படைத் தேவைகளுக்காக நடத்திய போராட்டத்தை அடக்குமுறையை கட்டவித்துவிட்டு ஒடுக்கிய சிறைச்சாலை அதிகாரிகள், இன்றைய தினம் மேலுமொரு கைதியை தாக்குதல் நடத்தி காயப்படுத்தியிருப்பதாகவும் கைதிகளின் உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் சுதேஷ் நந்திமால் குற்றம்சாட்டியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளின் அடிப்படை உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்பட்டு வருவதாகவும், கைதிகள் பல சந்தர்ப்பங்களில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி வெலிக்கடை சிறைச்சாலைக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் ஏற்பாட்டில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கைதிகளின் உரிமைகளுக்காக போராடும் பலர் பங்கேற்றனர். இதன்போதே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு ஏற்பாட்டாளர் சுதேஷ் நந்திமால், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிபீடம் ஏறிய மைத்ரி – ரணில் தலைமையிலான நல்லாட்சியிலும் சிறைச்சாலைகளில் சித்திரவதைகள் தொடர்வதாக குற்றம்சாட்டினார்.

நேற்று போராட்டத்தில் பங்கேற்ற அந்த அமைப்பின் மற்றுமொரு ஏற்பாட்டாளரான லால் பெரேரா, கைதிகளுக்கு எதிராக நடைபெறும் சித்திரவதைகளை சர்வதேசம் அவதானித்துக்கொண்டிருப்பதாகத் அரசாங்கத்தை எச்சரித்தார்.

சிறிலங்காவின் நீதி அமைச்சராக பெண் ஒருவர் பதவி வகிக்கும் நிலையில் சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகளுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலை நீடிப்பது மிகவும் துர்பாக்கியமானது என்று போராட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் குற்றம்சாட்டினார்.