வெளியேற்றப்படும் சென்னையின் பூர்வகுடிகள்!

Wednesday November 01, 2017

சென்னையின் ஆற்றங்கரையோரத்தில் இருந்து 55,000 குடும்பங்கள் வெளியேற்றப்படுவதை உடனடியாக நிறுத்து.

செப்டம்பர் 9 மற்றும் 15, 2017இல் சென்னையில் இரு இடங்களில் ஆக்கிரமிப்பு எனும் பெயரில் 347 குடும்பங்களை மதுரவாயில் எம்.எஸ்.பி நகரில் இருந்தும், அமைந்தகரையிலிருந்து 46 குடும்பத்தினரையும்  வலுக்கட்டாயமாக அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றி அப்புறப்படுத்தி இருக்கிறது  சென்னை மாநகராட்சி. 

இந்த மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றி இருக்கிறது அரசு. மேலும் இவர்கள் தாங்கள் வசித்தப்பகுதியிலிருந்து வெகுதொலைவிற்கு கொண்டு சென்று குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். மதுரவாயிலில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அங்கிருந்து கிட்டதட்ட 24.3 கி.மீ தொலைவில் குடப்பாக்கம் திருமழிசையில் குடியமர்த்தப்பட்டார்கள். அமைந்தகரையிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அவர்களுடைய வசிப்பிடத்திலிருந்து 30கி.மீ தொலைவில் இருக்கும் பெரும்பாக்கத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். 

இவ்வாறு இடம்மாற்றுவது குறித்தான எவ்வகையான ’ பாதிப்புகள் குறித்த களஆய்வும்’ மேற்கொள்ளாமல் செய்யப்பட்டிருக்கிறது.

வசித்த இடத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் கொண்டமர்த்தும் பொழுது அம்மக்களுடைய வாழ்வுரிமை பாதிக்கப்படுகிறது. பல சமயங்களில் அவர்களது வாழ்வாதாரம் அழிந்து போகிறது. புதிய இடங்கள் இம்மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றவகையிலும் அமைவதில்லை. இதில் பெரிதும் பாதிக்கப்படுவது குழந்தைகளே. பள்ளி படிப்பின் இடைக்காலத்தில் இவ்வாறு மாற்றுவதன் மூலம் குழந்தைகள் தங்களுடைய பள்ளிக்கு கிட்டதட்ட 24, 30 கிமீ தூரம் பயணப்பட வேண்டி இருக்கிறது. 

இது அவர்களுடைய பள்ளி படிப்பையும், கல்வி உரிமையையும் கடுமையாக பாதிக்கிறது. பெரும்பாலன குழந்தைகள் போதிய உணவுகூட எடுக்க இயலாத நிலையில் பள்ளிக்கூடம் செல்வது அல்லது பள்ளியில் இருந்து நின்றுவிடுவது போன்ற அவலங்கள் நிகழ்கிறது. வேலைவாய்ப்பினையும் அம்மக்கள் இழக்கின்றனர். 

அமைந்தகரை மக்களுக்கு வீடு அகற்றப்படுவது குறித்து முன்னறிவிப்பு இரண்டு நாட்களுக்கு முன்னதாக மட்டுமே கொடுத்துவிட்டு வீடுகளை அகற்றியது அரசு. ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்று குடிசைகளை ஏழை எளிய மக்களை அகற்றும் அரசு, அதே சமயத்தில் கார்ப்பரேட்-வணிக நிறுவனங்கள் ஆக்கிரமித்திருக்கும் இடங்களை/கட்டிடங்களை அகற்ற மறுக்கிறது. கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் வீடுகள் இடிக்கப்பட்ட கிட்ட 12 குடும்பங்களுக்கு இன்றூவரை மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவில்லை.  

வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் இம்மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இதர தேவைகள் குறித்து எவ்விதமான ஆய்வும் மேற்கொள்ளாமல் வன்முறையாக அரசு நடந்து கொள்கிறது. மேலும் இந்த வெளியேற்றம் என்பது சர்வதேச விதிமுறைகள், உள்நாட்டு விதிமுறைகள் என எவற்றையும் பின்பற்றாமல் எதேச்சையாக நடந்து கொண்டுவருவது கண்டிக்கத் தக்கது.

அதே போல  காசிமேடு அருகே அமைந்துள்ளது நல்லதண்ணி ஓடை குப்பம். இந்தக் கிராமத்தில் மட்டும் 446 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் எண்ணூர் சாலை விரிவாக்கத்துக்காக நல்ல தண்ணி ஓடைக்குப்பம் கிராமத்தில் முதலில் 250 மீனவக் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். 

தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் முடிவுறும் தருவாயில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 196 மீனவக் குடிசைகளை அரசு அதிகாரிகள் தலைமையில் வந்த குழுவினர் இடித்துள்ளனர். இதற்கு மாற்றாக, நல்ல தண்ணி ஓடைக்குப்பம் கிராம மக்களுக்கு மாற்று நிலத்தையும் வழங்கியுள்ளனர். இந்த நிலத்துக்கான சர்வே எண் நடுக்கடலில் அமைந்துள்ளது

2015இல் நிகழ்ந்த வெள்ளத்தினை காரணமாகக் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் Mr. Rajiv Rai v. Government of Tamil Nadu (W.P. No. 39234 of 2015) கொடுத்த “ ஆக்கிரமிப்புகளை அகற்றுவது” குறித்தான ஆணையை வைத்து பெருநகர சென்னைமாநகராட்சி, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம், மற்றும் சென்னை நதிமறுசீரமைப்பு நிறுவனத்தின் கூவம் ஆற்று சூழல் சீரமைப்பு திட்டம் ஆகியவை ஒன்றிணைந்து 2016 முதல் இந்த வெளியேற்றத்தை மனித உரிமை மீறுகின்ற வகையில் நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்த ஆணையின் மூலமாக கிட்டதட்ட 55,000 குடும்பங்கள் வெளியேற்றப்பட இருக்கிறார்கள். இதன்படி

அடையாறு ஆற்றுப்பகுதியில் இருந்து 9539 குடும்பங்கள்

கூவம் ஆற்றுப்பகுதியில் இருந்து 14,257 குடும்பங்கள்,

வடக்கு பக்கிங்காம் கால்வாய் பகுதியிலிருந்து 9000 குடும்பங்கள்

மத்திய பக்கிங்காம் கால்வாய் பகுதியிலிருந்து 5300 குடும்பங்கள்

வடக்கு பக்கிங்காம் கால்வாய் பகுதியிலிருந்து 12000 குடும்பங்கள்

என ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெளியேற்றப்பட இருக்கின்றன.


கூவம் ஆற்றுப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் அம்பாமால் உள்ளிட்ட பெருநிறூவன முதலீடுகள் மீது நடவடிக்கை எடுக்காத இந்நிறுவனங்கள் ஏழை எளிய மக்கள் குடிசைகளை அப்புறப்படுத்துகின்றன. இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மாற்று இடங்களும் வெள்ளத்தால் மூழ்கும் இடங்களாகவும், பள்ளிக்கூடம், மருத்துவமனை இல்லாத பகுதிகளாகவுமே அமைக்கப்பட்டிருக்கின்றன.

 இம்மாதிரியான நடவடிக்கைகள் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீறும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. அவர்களுடைய இடங்களிலிருந்து 5 கிமீக்கும் உள்ளாகவே அவர்கள் மறுகுடியமர்த்தபப்ட வேண்டிமென்கிற சர்வதேச-உள்நாட்டு விதிமுறைகளுக்கு எதிராக வெகு தொலைவில் இக்குடும்பங்கள் அமர்த்தப்படுகின்றன. இம்மக்களைக்கு தேவையான அடிப்படை வசதிகள், அகற்றப்படும் போது பின்பற்றவேண்டிய ஆய்வுகள், கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டிய  ஐநாவின் விதிமுறைகள், உச்சநீதிமன்ற தீர்ப்புகள், பாதிக்கப்படும் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நட்ட ஈடுகள், பாதிக்கப்படும் மக்கள் குறித்து சமூக ஆர்வலர் உடனான கலந்தாலோசனைகள், பாதிக்கப்படும் மக்களுடனான விவாதங்கள் என எவையும் மேற்கொள்ளப்படாமல் நிகழும் இந்த மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். முறையான மாற்றிடம் இல்லாமல், வாழ்வாதார வசதிகள், குழந்தைகளுக்கான பள்ளிகள், குடியிருப்பு வசதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் ஒப்புதல் இல்லாமல்,  இவர்கள் இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட கூடாது என்பதையே மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட தோழமை இயக்கங்கள் வலியுறுத்துகின்றன.