வெள்ளி விழா கண்ட அவுஸ்திரேலிய சிட்னி தமிழ் அறிவகம்

புதன் மே 11, 2016

அவுஸ்திரேலியாவில் பெருமளவிலான தமிழர்கள் வாழ்ந்து வரும் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் தமிழர்களின் வாசிப்புத் தேடலை பூர்த்தி செய்து வரும் சிட்னி தமிழ் அறிவகத்தின் வருடாந்த கலாச்சார நிகழ்வான 'வசந்த மாலை - 2016' வெள்ளி விழா நிகழ்வாக நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வு Ryde இல் உள்ள Civic Centre மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.05.2016) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வு ஹோம்புஷ் தமிழ்ப் பாடசாலை மாணவர்களின் தமிழ் மொழி வாழ்த்துடன் தொடங்கியது. 

நிகழ்வில் பல்கலாச்சாரத்துக்கான பிரதியமைச்சரும் நியூசவுத்வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். வருகை தந்திருந்த இரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேலை அணிந்து தமிழர்களின் பண்பாட்டுக்கு மதிப்பு கொடுத்திருந்தமை சபையோரின் பாராட்டினைப் பெற்றிருந்தது.

இவர்கள் தமது உரையில் தமிழர்களின் பிரச்சினைகளையும் அவர்களின் கடின உழைப்பு தொடர்பிலும் குறிப்பிட்டு இருந்தனர். சிட்னி தமிழ் அறிவகத்தில் நீண்ட காலமாக தொண்டாற்றி வந்த சில மூத்த உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் முத்தான மூன்று நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

முதலாவதாக சிட்னியைச் சேர்ந்த இளையோர் வழங்கிய இசை நிகழ்வும் தொடர்ந்து Recover இசைக்குழு Karaoke இசையுடன் வழங்கிய சில தமிழ் சினிமாப் பாடல்களும் இறுதியாக 'பரதாலயா' நடனப் பள்ளி மாணவர்கள் வழங்கிய பரத நாட்டிய நிகழ்வும் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகள் அனைத்தும் சிட்னியில் வாழ்ந்து வரும் சிறுவர்களும் இளையோர்களும் இணைந்து வழங்கிய நிகழ்வுகள் ஆகும். இதன் ஊடாக சிட்னி தமிழ் அறிவகத்தின் மிக முக்கிய நோக்கமான எதிர்கால சந்ததியினரை தமிழ் அறிவகத்துடன் இணைப்பது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு எனக் கூறலாம்.

முக்கியமாக நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய பல்கலைக்கழக மாணவி அனைவரினதும் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார். இவர் உயர்தரப் பரீட்சையில் தமிழை ஒரு பாடமாக எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இளையோரை ஊக்குவிப்பதில் சிட்னி தமிழ் அறிவகம் தனக்கென தனியொரு இடத்தினை வைத்திருப்பது நோக்கத்தக்கது.

சிட்னி தமிழ் அறிவகமானது 1991 ஆம் ஆண்டு 20 நூல்களோடு தொடங்கப்பட்டது. இந்நூலகமானது தற்போது 8,500-க்கும் அதிகமான நூல்களை தன்னகத்தே கொண்டு சிட்னி மாநகரில் அமைந்துள்ள முருகன் கோவிலுக்கு அருகில் இயங்கி வருகின்றது.   

சிட்னி தமிழ் அறிவக முகவரி:

Sydney Tamil Resource Centre
191 Great Western Highway
Mayshill
NSW 2145
Telephone: +61 2 9635 5748
Web: www.strc.net.au