வேலைக்கு மத்தியில் ஓய்வு தேவை!

Thursday September 14, 2017

எந்த வேலையையும் பரபரப்பின்றி, நிதானமாக ஓய்வுக்கு மத்தியில் செய்து பழகுவதே சிறந்தது.வேலை செய்வது எவ்வளவு முக்கியமோ, அதுபோல் ஓய்வெடுப்பதும் முக்கியம்தான். தொடர்ச்சியாக வேலையில் கவனத்தை பதிக்கும்போது ஏதாவது ஒரு கட்டத்தில் மனம் சோர்வடைய கூடும். 

அந்த சோர்வில் இருந்து விடுபடுவதற்கு ஓய்வு அவசியமானதாக இருக்கும். அதற்காக முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டியதில்லை. சில நிமிடங்கள் மனதை ஆசுவாசப் படுத்திவிட்டு, செய்து வரும் வேலைக்கு மாற்றாக வேறு ஏதாவது ஒரு செயலில் கவனத்தை திருப்பலாம். 

அந்த செயல்களைப்பை போக்கி மனச்சோர்வை நீக்குவதற்கு உதவும். பொதுவாக மனம் சோர்வடைவதே களைப்பு தோன்றுவதற்கு காரணமாகிறது. அந்த சமயத்தில் செய்கின்ற வேலையில் இருந்து வேறு விஷயங்களுக்கு கவனத்தை திருப்புவதே மனதிற்கு தேவையான ஓய்வை கொடுத்துவிடும். சிலர் செய்யும் வேலையை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்ற சிந்தனையிலேயே மூழ்கியிருப்பார்கள். 

முழு கவனத்தையும் அந்த வேலை மீதே பதிக்கும்போது மனம் அழுத்தத்திற்கு உள்ளாகிவிடும். அது தேவையில்லாத நெருக்கடியை ஏற்படுத்திவிடும். பதற்றமும், பயமும் கூடவே தொற்றிக்கொள்ளக்கூடும். எப்படி வேலையை முடிக்கப்போகிறோமோ? என்ற கவலையையும் எட்டிப்பார்க்க வைத்துவிடும்.

வேலைக்கு மத்தியில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதால் நேரம் வீணாகி போய்விடுமே என்ற கவலை சிலரிடத்தில் காணப்படும். அந்த ஓய்வு ஒருபோதும் வேலைக்கு முட்டுக்கட்டையாக அமையாது. வேலையை துரிதமாக செய்து முடிப்பதற்கான அடுத்த கட்ட திட்டமிடலுக்காகவும் அந்த ஓய்வை பயன் படுத்திக்கொள்ளலாம். 

அதன் மூலம் துரிதமாக செயல்படுவதற்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை வகுத்து, திறம்பட வேலையை செய்து முடிக்கலாம். மேலும் எந்தவேலையையும் பரபரப்புடன் செய்வதற்கு முயலக்கூடாது. அது தேவையற்ற பதற்றத்தையே தோற்றுவிக்கும். ஆதலால் எந்த வேலையையும் பரபரப்பின்றி, நிதானமாக ஓய்வுக்கு மத்தியில் செய்து பழகுவதே சிறந்தது.