ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு !

Wednesday July 04, 2018

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று அண்ணா அறிவாலயம் சென்று சந்தித்த வைகோ ம.தி.மு.க. முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று அண்ணா அறிவாலயம் சென்று சந்தித்தார். ஈரோட்டில் செப்டம்பர் 15-ந்தேதி நடைபெற இருக்கும் ம.தி.மு.க. முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுமாறு அழைப்பு விடுத்தார். இருவரும் சுமார் 20 நிமிட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

சந்திப்பு முடிந்ததும் வைகோ நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

செப்டம்பர் 15-ந்தேதி ஈரோட்டில் பெரியார், அண்ணா பிறந்தநாள் விழா, ம.தி.மு.க.வின் வெள்ளி விழா, என்னுடைய பொது வாழ்வு பொன்விழா ஆகிய 3 விழாவையும் இணைத்து மாநில மாநாடாக - முப்பெரும் விழா மாநாடாக நடத்த திட்டமிட்டு இருக்கிறேன்.

அந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன். அவரும் இந்த மாநாட்டுக்கு வந்து பொன்விழா மலரை வெளியிட்டு முப்பெரும் விழாவில் பங்கேற்க இசைவு தந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.