ஸ்டீபன் ஹாக்கிங் புகழ் என்றும் உலகில் நிலைத்து நிற்கும்!

Wednesday March 14, 2018

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தாலும் அவரின் புகழ் உலகில் நிலைத்திருக்கும் என நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு உலகின் பல தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், அவரது மரணத்திற்கு நடிகர் கமல்ஹாசன் மற்றும் பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளனர். 'திரு.ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் நம்மிடை வாழ்ந்ததில் பெருமை கொள்வர் உலக மக்கள். அவர் நமக்களித்த ஞான தானத்தை என்றும் நினைவில் கொள்வோம். அவர் புகழ் வாழும்' என நடிகர் கமல்ஹாசன் டுவிட் செய்துள்ளார்.

'ஸ்டீபன் ஹாக்கிங் மிகச்சிறந்த மனிதர். அவரின் இழப்பு பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய அறிவு மனித இனத்தின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையாக அமையும். இந்த உலகைப்பற்றி அறிந்து கொள்ள அவரின் ஆராய்ச்சி நமக்கு உதவியாக இருந்தது. அவரின் புகழ் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் நிலைத்திருக்கும். ஸ்டீபனின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்' என பா.ஜ.க தலைவர் அமித் ஷா டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.