ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு உச்சநீதிமன்றம் ஆணையிடவில்லை!

Tuesday January 08, 2019

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு உச்சநீதிமன்றம் ஆணையிடவில்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் ரோகிங்டன் நரிமன், நீதியரசர் நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நான் (வைகோ), இந்த வழக்கில் நேற்று மேல் முறையீடு செய்து இருக்கின்றேன். வழக்கு எண் 913/2019. அதையும் சேர்த்து இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

‘உங்களுக்காக யார் வாதாடுகிறார்?’ என்று நீதிபதி சின்கா கேட்டார். ‘நானேதான் வாதாடுகிறேன்” என்று கூறினேன்.எனவே, முதன்மை வழக்கோடு வைகோவின் மேல் முறையீட்டையும் சேர்த்து விசாரிக்க நீதிபதி ஆணை பிறப்பித்தார்.

 

ஆலையை உடனே திறக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் கேட்டார்.

“அப்படி ஒரு உத்தரவை நாங்கள் பிறப்பிக்க முடியாது. மதுரை உயர்நீதிமன்றம், ஆலையைத் திறக்கக்கூடாது என்ற தீர்ப்புக்குத் தடை விதிக்கின்றோம். பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தீர்ப்பு குறித்த வழக்கில் விசாரணை நடக்கும். ஸ்டெர்லைட் தரப்பு தங்கள் வாதங்களை முன்வைக்கலாம். அரசுத் தரப்பும், மற்றத் தரப்பினரும் முன்வைக்கலாம் என்று கூறி, இந்த வழக்கு தொடர்பான அனைத்துத் தரப்பினருக்கும் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டனர்.

ஆலையைத் திறக்க வேண்டும் என உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இன்றைய விசாரணையில், உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சிவபால முருகன், கழக வழக்கறிஞர்கள் ஆசைத்தம்பி, ஆனந்தசெல்வம், சுப்பாராஜ் ஆகியோர் வைகோவுடன் இருந்தனர்.