ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க முடியாது!

புதன் சனவரி 09, 2019

ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க முடியாது என்று தூத்துக்குடி மாவட்ட ஆணையாளர்  சந்தீப் நந்தூரி கூறினார். 

தூத்துக்குடி மாவட்ட ஆணையாளர்  சந்தீப் நந்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக கடந்த 15-12-18 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவு வந்த உடன், முதல்-அமைச்சர் இது இறுதி உத்தரவு அல்ல, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்படி தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவில் உள்ள அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்து, சட்டப்படி மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் உச்சநீதிமன்றம் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உடனே ஆலையை திறக்க எந்த இடத்திலும் கூறவில்லை. உச்சநீதிமன்றத்தில் சட்ட வல்லுநர்கள் மூலம் வழக்கு நடத்தப்படும். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை இதே நிலை(ஸ்டேட்டஸ் கோ) நீடிக்கும். உடனடியாக ஆலையை திறப்பதற்கான எந்த உத்தரவும் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வரவில்லை.
 

மதுரை உச்ச நீதிமன்றம்  பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தாலும், அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை நடக்கிறது. தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. அந்த நிபந்தனைகளை ஆலை நிர்வாகம் சரி செய்த பிறகு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு மாசுகட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்யும். தற்போது எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை. நிபந்தனைகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் நிறைவேற்றியதாகவும் தெரியவில்லை.

 


நாங்கள் சட்டரீதியாக தொடர்ந்து போராடி வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்பது அரசின் முடிவு ஆகும். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமான இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமைதி வழி போராட்டத்தில் மக்கள் பங்கேற்றனர். அரசு நடவடிக்கையால் 13 உயிர்களை இழந்து உள்ளோம். இப்படிப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு எதிராகவே அமைந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து அகற்றப்படும் வரை மக்களின் அமைதி வழி போராட்டங்கள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.