ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி!

புதன் நவம்பர் 28, 2018

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளின் பேரில் செயல்பட அனுமதி அளிக்கலாம் என தருண் அகர்வால் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் தீவிர போராட்டம் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பதாகவும், பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் கூறி நடந்த இந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனை அடுத்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. 


இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும், ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது. 
 

அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

அதன்படி ஆய்வு நடத்திய தருண் அகர்வால் குழு நேற்று முன்தினம் அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்தது. 

அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளுடன் மீண்டும் செயல்பட அனுமதி தரலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது என்றும் கூறியுள்ளது. இந்த அறிக்கை தமிழக அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்க உள்ளது.