ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆய்வு அறிக்கை வைகோ கண்டனம்

Sunday September 09, 2018

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி மக்கள் கொந்தளிப்பு ஏற்பட்டு போராட்டங்கள் வெடித்தன. போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு 13 பேர் பலி ஆனார்கள். தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கான அனுமதியைப் புதுப்பிக்க மறுப்பு தெரிவித்ததால், ஆலை மூடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்குகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும், சென்னை உயர்நீதின்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கின்றன.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு மத்திய அரசு துணை போகும் விதத்தில், மத்திய நீர்வளத்துறை மூலம் தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபடுதல் தொடர்பாக ஆய்வு நடத்தி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ள பகுதியில் நீரின் தரம் மற்றும் தன்மை குறித்து ஆய்வு செய்திட மத்திய நிலத்தடி நீர் வாரியத்திற்கு மத்திய நீர்வளத்துறை உத்தரவிட்டு, அதன் அடிப்படையில் நடந்த ஆய்வில் தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை என்று தெரிய வந்ததாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆய்வறிக்கை தந்துள்ளது. இந்த அறிக்கை செப்டம்பர் 5 ஆம் தேதி தமிழக அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

மாநில அரசின் அதிகாரத்தில் உள்ள சுற்றுச் சூழல் துறைக்கு தெரிவிக்காமலேயே மத்திய நிலத்தடி நீர் வாரியம் தூத்துக்குடியில் நிலத்தடி நீர் ஆய்வு மேற்கொண்டது கடும் கண்டனத்துக்கு உரிய அத்துமீறல் செயலாகும். தமிழக அரசு ஏற்கனவே சுற்றுச் சூழல்துறை மூலம் ஆய்வு செய்து, ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தைப் புதுப்பிக்க மறுத்து ஆணை பிறப்பித்தப் பின்னர், மத்திய நீர்வளததுறை திடீரென்று ஆய்வு நடத்தி பொய்யான, ஆதாரமற்ற அறிக்கையை அளித்து, தமிழக அரசுக்கும் அதை அனுப்பி, ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டதை பொறுத்துக்கொள்ள முடியாது. வேதாந்தா நிறுவத்தின் உரிமையளார், ஸ்டெர்லைட் ஆலை அதிபருக்கு அனைத்து வகையிலும் உதவி வருகிற மத்திய அரசு, ஸ்டெர்லைட் ஆலையை எவ்விதத்திலும் மீண்டும் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யும் நோக்கத்தில்தான் இந்த அநீதியான ரகசிய வேலையில் ஈடுபட்டிருப்பதன் மூலம் தமிழக மக்களின் நலனை மத்திய அரசு கால் தூசாகவே கருதுகிறது என்பதற்கு இது மேலும் ஓர் உதாரணம் ஆகிவிட்டது.

மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் உள்நோக்கம் கொண்ட ஆய்வு அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். எந்த நிர்பந்தத்திற்கும் அடிபணியாமல் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

‘தாயகம்’                                                       வைகோ
சென்னை - 8                                                பொதுச்செயலாளர்
09.09.2018                                                      மறுமலர்ச்சி தி.மு.க.