ஸ்பெயினில் பெண்கள் வேலை நிறுத்தம்!

Friday March 09, 2018

ஸ்பெயின் நாட்டில் பாலின சமத்துவமின்மைக்கு எதிராக பெண்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இவர்களது வேலை நிறுத்தம் காரணமாக நேற்று 300 தொடருந்துகள் ஓடவில்லை.

உலகமெங்கும் நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நாளில், ஸ்பெயின் நாட்டில் பாலின சமத்துவமின்மைக்கு எதிராக பெண்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இந்த 24 மணி நேர வேலை நிறுத்தத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.

இதில் அந்த நாட்டு நடிகையும், மாடல் அழகியுமான பெனிலோப் குருசும் பங்கேற்றார். தனது நிகழ்ச்சிகளை அவர் ரத்து செய்தார். இந்த வேலை நிறுத்தத்துக்கு அங்கு 82 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. 76 சதவீதம்பேர் ஆண்களை விட பெண்கள் சிரமப்படுவதாக தெரிவித்து உள்ளனர்.

ஸ்பெயினில் ஆண்களை விட பெண்கள் பொதுத்துறையில் 13 சதவீதமும், தனியார் துறையில் 19 சதவீதமும் குறைவாக சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த சமத்துவம் இல்லாத நிலைதான், அங்கு பெண்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இவர்களது வேலை நிறுத்தம் காரணமாக ஸ்பெயினில் நேற்று 300தொடருந்துகள் ஓடவில்லை. சுரங்க வழி ரெயில் சேவையும் பாதிப்புக்கு ஆளானது.