ஹரிஸ்ணவியின் படுகொலைக்கு எதிரான ஹர்தாலுக்கு த.தே.ம.மு ஆதரவு

Wednesday February 24, 2016

பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலைக்கு எதிரான பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு பூரண ஆதரவு

வவுனியா தமிழ் மாகா வித்தியாலய மாணவி கங்காதரன் ஹரிஸ்ணவி அவர்கள் அவரது வீட்டில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் கொடுரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். இப்படுகொலைச் சம்பவத்தினை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். 

பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலைச் சம்பவங்கள் படிப்படியாக அதிகரித்துச் செல்கின்றதேயன்றி குறைந்து செல்வதாக இல்லை. பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது வயது வேறுபாடின்றி இடம்பெற்று வருகின்றது. 

பெண்களுக்கு எதிரான சகல ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க அனைவரும் முன்வரவேண்டும். பெண்களின் பாதுகாப்பு மற்றும் கௌரவம் தொடர்பில் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அக்கறை செலுத்த வேண்டும்.

ஹரிஸ்ணவியின் மீதான பாலியல் வன்புணர்வு மற்றும் படுகொலையை கண்டித்து நாளை நடைபெறவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது பூரண ஆதரவை வழங்குகின்றது. அத்துடன் 25-2-2016 (வியாழக் கிழமை) பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு முழுமையான ஆதரவினை தெரிவித்துக் கொள்கின்றது. 
நன்றி,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,                     செல்வராசா கஜேந்திரன்    
தலைவர் .                                                            பொதுச் செயலாளர்